மும்பை: யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை என்று தனது தாயான பாஜக எம்பி ஹேம மாலின குறித்து அவரது மகளான நடிகை ஈஷா தியோல் பெருமிதத்துடன் கூறினார். பாலிவுட் கனவுக் கன்னியாக போற்றப்படும் பாஜக எம்பியான ஹேமமாலினியின் மகளான பாலிவுட் நடிகை ஈஷா தியோல், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘நம்முடைய நாட்டில், ஒவ்வொரு தாயும் தனது மகளுக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் தங்களுக்கென ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். என் தாயும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் எப்போதும் எனக்கு அதையேதான் சொன்னார். யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை என்றும், ஒருவர் எப்போதும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றும் அவர் எப்போதும் என்னிடம் கூறினார். எனது தாயார் அளித்த அறிவுரை மற்றும் வழிகாட்டுதல்கள் எனக்கு பெரிதும் உதவுகின்றன. நாம் பெண்களாக இருந்தாலும், கடினமாக உழைக்கிறோம். நமக்கு ஒரு தொழில் மற்றும் சில பொறுப்புகள் உள்ளன. அவற்றை ஒருபோதும் புறக்கணிக்க கூடாது என்றும் கூறுவார். வாழ்க்கையில் பெரிய புகழைப் பெறாவிட்டாலும், நம்முடைய வேலையை மட்டும் நிறுத்தக் கூடாது என்றும் கூறுவார்.
நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் அன்பு; அதனை மற்றவர்களிடம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறுவார். எனவே எனது தாயார் அளித்த தைரியத்தால் தான், என் வாழ்க்கையில் எந்தவித கடினமான சூழ்நிலையையும் தாங்கிக் கொள்ள முடிகிறது’ என்று அவர் கூறியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பாரத் தக்தானியை திருமணம் செய்து கொண்ட ஈஷா தியோல், சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை: தாயான பாஜக எம்பி குறித்து நடிகை பெருமிதம் appeared first on Dinakaran.