டெல்லி : யுபிஐ மற்றும் ஏடிஎம்கள் மூலம் பிஃஎப் பணம் எடுக்கும் வசதி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிஃஎப் பணத்தை எடுக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது, பல நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோரிக்கை நிராகரிக்கப்படுவதால் பிஃஎப் பணம் எடுப்பதில் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணுமாறு ஊழியர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், பணம் எடுப்பதை ஒழுங்குபடுத்தவும் செயல்முறையை விரைவுப்படுத்தவும் யுபிஐ வழியாக பிஃஎப் பணம் எடுப்பதை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய வசதி, ஜிபே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ தளங்களை பயன்படுத்தி, பிஃஎப் உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை உடனடியாக எடுக்க அனுமதிக்கும். இந்த அம்சத்தை அறிமுகம் செய்வதற்காக ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு, தற்போது என்பிசிஐ- யுடன் ஆலோசித்து வருகிறது. இந்த திட்டம் மே அல்லது ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏடிஎம் பணம் எடுப்பது உள்பட பிஃஎப்ஓ 3.0 முயற்சி என்றும் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். அதன்படி செயல்படுத்தப்படும் இந்த திட்டம், யுபிஐ அடிப்படையிலான பிஃஎப் பணம் எடுப்பது ஊழியர்கள் பல நன்மைகளை வழங்கும். இதில் நிதி தேவைகளை உடனடியாக பெறலாம்.
The post யுபிஐ, ஏடிஎம்கள் மூலம் பிஃஎப் பணம் எடுக்கும் வசதி.. ஜூன் மாதத்திற்குள் தொடங்க நடவடிக்கை : ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.