மும்பை: ரியல் எஸ்டேட் அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பரான ராகேஷ் ஜெயினுக்கு எதிராக அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகேஷ் ஜெயின் முறையிட்டார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சம்மனை ரத்து செய்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மிலிந்த் ஜாதவ் பிறப்பித்த உத்தரவில், ‘அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் சட்டத்தை தங்களது கைகளில் எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. மனுதாரர் ராகேஷ் ஜெயின் மீது எந்த வழக்கும் இல்லை. எனவே அவர் மீதான பணமோசடி குற்றச்சாட்டுகள் ஏற்கக் தக்கதல்ல. ராகேஷ் ஜெயின் மீது அளிக்கப்பட்ட புகார் மற்றும் அமலாக்கத் துறையின் நடவடிக்கை ஆகியன அவருக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது. எனவே அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் அரசியலமைப்பின் சட்டத்தின் வரம்பிற்குள் செயல்பட வேண்டும். அவர்கள் சரியாக சிந்திக்காமல் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது.
இதனை வலுவான செய்தியாக வெளியிட வேண்டியிருப்பதால், அமலாக்கத்துறைக்கு அபராதம் விதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனவே ராகேஷ் ஜெயினுக்கு எதிராக தொடரப்பட்ட பணமோசடி விசாரணை தவறானது என்று நீதிமன்றம் கருதுகிறது. அதேநேரம் வரம்பை மீறி அவருக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியதால் அமலாக்கத்துறைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையான ரூ. 1 லட்சத்தை உயர்நீதிமன்ற நூலகத்திற்கு அமலாக்கத்துறை செலுத்த வேண்டும். அதேபோல் இந்த வழக்கில் ராகேஷ் ஜெயினுக்கு எதிராக புகார் அளித்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவர் இந்த அபராத தொகையை மும்பையில் உள்ள கீர்த்திகர் சட்ட நூலகத்திற்கு செலுத்த வேண்டும்’ என்று அதிரடி தீர்ப்பளித்தார்.
The post ரியல் எஸ்டேட் அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.