கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வகுப்புவாத வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் துலியான், சுடி, ஜாங்கிபூர் மற்றும் ஷம்ஷெரகஞ்ச் ஆகிய பகுதிகளில் கடந்த 10,11 ஆகிய தேதிகளில் நடந்த போராட்டங்களில் பயங்கர வன்முறை வெடித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, இந்திய மதசார்பற்ற முன்னணி(ஐஎஸ்எப்) சார்பில் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வாகனங்களில் கொல்கத்தாவுக்கு வந்தனர்.
அப்போது, ஐஎஸ்எப்பினருக்கும் காவல்துறைக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். பொதுசொத்துகள் சேதமடைந்தன. மேலும் காவல்துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனிடையே தந்தை, மகன் இருவர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனால் முர்ஷிதாபாத் வன்முறை சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 221ஆக அதிகரித்துள்ளது.
கலவரக்காரர்களுக்கு முழுசுதந்திரம்: யோகி
உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசும்போது, “வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தால் மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. ஆனால் அதன் முதல்வர் மம்தா அமைதி காக்கிறார். கலவரக்காரர்களை அமைதியின் தூதர்கள் என மம்தா அழைக்கிறார். மேற்குவங்கத்தில் அமைதியின்மையை உருவாக்க மதசார்பின்மை என்ற பெயரில் கலவரக்காரர்களுக்கு முழு சுதந்திரத்தை மம்தா வழங்குகிறார்.
கடந்த ஒரு வாரமாக முர்ஷிதாபாத் தீப்பிடித்து எரிகிறது. ஆனால் அங்கு அரசாங்கம் எதையும் செய்யாமல் அமைதியாக உள்ளது. இதுபோன்ற அராஜகங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மாநிலத்தில் சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய படைகளை அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றத்துக்கு நன்றி கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.
The post வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு; மே.வங்கத்தில் மீண்டும் வன்முறை: 221 பேர் கைது appeared first on Dinakaran.