புதுடெல்லி: புதிய வரி குறைப்பு, வேலைவாய்ப்பு சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட நிலையில், இந்திய நிறுவனங்களுக்கு ஜாக்பாட் அடித்தாலும் கூட, ஐடி துறைக்கு ஆபத்தும், ஒன்றிய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு சவால் விடுக்கும் வகையில் அமைத்துள்ளதால் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே, ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையை தனது நிர்வாகத்தின் மையமாகக் கொண்டு செயல்பட்டார். இதன் முக்கிய நோக்கம், வெளிநாடுகளுக்கு, குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்குச் சென்ற அமெரிக்க வேலைவாய்ப்புகளையும், பல்லாயிரம் கோடி டாலர் முதலீடுகளையும் மீண்டும் தாய்நாட்டிற்கே கொண்டு வருவதாகும்.
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முதல் பதவிக்காலத்திலேயே பெரும் சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் மத்தியில், கடந்த 2017ம் ஆண்டில் பிரம்மாண்ட வரி சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக அமெரிக்க பெருநிறுவனங்களுக்கான வரியை 35 சதவீதலிருந்து 21 சதவீதமாக குறைத்தார். ஆனால் இந்தச் சட்டம் பணக்காரர்களுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் மட்டுமே சாதகமாக இருப்பதாக அப்போதே எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. மேலும் இந்த வரிக்குறைப்பால் அரசின் கடன் சுமை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இதற்காக, அமெரிக்காவின் வரி விதிப்பு முறையில் பெரும் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வர திட்டமிட்டார். அப்போது அமெரிக்காவில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதம் 35% ஆக இருந்தது. இது உலகின் வளர்ந்த நாடுகளில் மிக அதிகமாகக் கருதப்பட்டதால், பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் லாபத்தை வெளிநாடுகளில் வைத்திருந்து, அங்கேயே மீண்டும் முதலீடு செய்து வந்தன. இந்தச் சூழலை மாற்றி, அமெரிக்காவை வர்த்தகம் செய்வதற்கு உலகின் மிக உகந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன், பிரம்மாண்ட வரிச் சீர்திருத்த மசோதா தயாரிக்கப்பட்டது. கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரதிநிதிகள் சபையில் 218-214 என்ற நூலிழை வித்தியாசத்திலேயே குடியரசுக் கட்சியினரின் ஆதரவுடன் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது ‘பணக்காரர்களுக்கான சலுகை’ என ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். இந்தச் சட்டம் நாட்டின் கடனை 3 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதுடன், இது வரும் 2026 தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் ஜனநாயகக் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப், தனது அரசின் மாபெரும் சாதனையாகக் கருதிய ‘வரி குறைப்பு மற்றும் வேலைவாய்ப்பு சட்டத்தில்’ வெள்ளை மாளிகையில் கையெழுத்திட்டு அதைச் சட்டமாக்கினார். அவர் இந்த மசோதாவை தனது வழக்கமான பாணியில் அடிக்கடி ‘மிகப்பெரிய அழகான மசோதா’ (Big Beautiful Bill) என்று பெருமையுடன் வர்ணித்தார். இந்தச் சட்டத்தின் மிக முக்கிய அம்சம், அமெரிக்க பெருநிறுவனங்களுக்கான வரியை 35 சதவீதத்தில் இருந்து அதிரடியாக 21% ஆகக் குறைத்ததுதான். மேலும், வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் வைத்திருக்கும் பல ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான லாபத்தை, மிகக் குறைந்த வரி செலுத்தி மீண்டும் அமெரிக்காவுக்குக் கொண்டு வரவும் இந்தச் சட்டம் வழிவகை செய்தது. இதன் மூலம் அமெரிக்காவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என டிரம்ப் நிர்வாகம் உறுதியாக நம்புகிறது.
இந்தச் சட்டம், இந்தியாவுக்கு சில குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கியது. அமெரிக்காவில் தங்கள் கிளைகளையோ அல்லது துணை நிறுவனங்களையோ கொண்டிருக்கும் டாடா, மஹிந்திரா, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற பெரிய இந்திய நிறுவனங்களுக்கு இந்த வரி குறைப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் அவர்கள் ஈட்டும் லாபத்திற்குச் செலுத்தும் வரி வெகுவாகக் குறைந்ததால், அவர்களின் நிகர லாபம் அதிகரித்தது. மேலும், அமெரிக்கப் பொருளாதாரம் இந்த வரி குறைப்பால் ஊக்கம் பெற்று வலுவடைந்தால், அங்கு இந்தியப் பொருட்களுக்கான நுகர்வோர் தேவை அதிகரித்து, இந்தியாவின் ஏற்றுமதிக்கும் மறைமுகமாக வழிவகுக்கும் என்றும் பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்தச் சட்டத்தால் இந்தியாவுக்கு நன்மைகளை விட சவால்களும், பாதகங்களுமே அதிகம் உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் (ஐடி) துறை மற்றும் பிசினஸ் ப்ராசஸ் அவுட்சோர்சிங் (பிபிஓ) துறைக்கு பெரும் அடியாக இருக்கும். வரிச் சலுகை மற்றும் ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ கொள்கை காரணமாக, பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வேலைவாய்ப்புகளை இந்தியாவிலிருந்து மீண்டும் அமெரிக்காவுக்கே மாற்ற வாய்ப்புள்ளது. இதனால், இந்தியாவுக்கு வர வேண்டிய பல லட்சம் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் புதிய சட்டத்தால் குறையும். இதுவே இந்திய ஐடி துறையின் வளர்ச்சி வேகத்தைக் கணிசமாகக் குறைக்கும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்தச் சட்டம் இந்தியாவுக்கு பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு துறையில் கலவையான தாக்கத்தையே ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு லாபத்தை தாய்நாட்டிற்குக் கொண்டு செல்லத் தொடங்கினால், இந்தியாவில் அவர்கள் செய்திருந்த முதலீடுகள் குறைய வாய்ப்பு ஏற்பட்டது. இது இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களுக்குப் பெரும் சவாலாக அமையும். அமெரிக்காவின் இந்த அதிரடி வரிச் சீர்திருத்தம், உலகளாவிய வர்த்தகப் போட்டியை அதிகப்படுத்தியதுடன், வெளிநாட்டு முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்ப்பதற்காக இந்தியாவும் தனது பெருநிறுவன வரிகளைக் குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய பெரும் கட்டாயத்தை உருவாக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முறையீடு;
தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பயணிகள் வாகனங்கள் மற்றும் இலகுரக டிரக்குகள் மீது அமெரிக்கா சமீபத்தில் 25% வரியை விதித்தது. இந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த வரி விதிப்பு, குறிப்பாக ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கு மே 3ம் தேதி முதல் காலவரையின்றி அமலுக்கு வந்தது. சர்வதேச வர்த்தக விதிகளின்படி, இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும்போது உலக வர்த்தக அமைப்பிற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், அமெரிக்கா இந்த விதியை மீறி, தன்னிச்சையாக அமல்படுத்தியது. இதனால் இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக இந்தியா தற்போது பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு, 1994ம் ஆண்டின் ‘காட்’ ஒப்பந்தத்தையும், உலக வர்த்தக அமைப்பின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒப்பந்தத்தையும் மீறுவதாக இந்தியா கடுமையாக வாதிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியா கோரிய ஆலோசனைக் கூட்டங்களை அமெரிக்கா நடத்தாததால், தற்போது பதிலடி நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கப் பொருட்களின் மீது, அதே அளவிற்கு பதிலடி வரியை விதிக்க அனுமதி கோரி உலக வர்த்தக அமைப்பை இந்தியா முறைப்படி அணுகியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், ஆண்டுக்கு சுமார் 2,895 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 24,000 கோடி) மதிப்புள்ள இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா சுமார் 723.75 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 6,000 கோடி) வரி வசூலிக்கும். இதற்கு ஈடாக, அதே அளவு தொகையை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியிலிருந்து வசூலிப்பதே இந்தியாவின் நோக்கமாக உள்ளது.
The post வரி குறைப்பு, வேலைவாய்ப்பு புதிய சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து; இந்திய நிறுவனங்களுக்கு ஜாக்பாட்: ஐடி துறைக்கு ஆபத்து? appeared first on Dinakaran.