டெல்லி: வடலூர் வள்ளலார் கோயிலில் இருந்து ஒரு கிமீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், கோயிலின் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ள கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வினோத் ராகவேந்திரா என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுதன்சு துலியா, கே.வினோத் சந்திரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சத்தியஞான சபையில் உள்ள பெருவெளி வழிபாடு மற்றும் போதனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த இடத்தில் வேறு எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ள கூடாது என வள்ளலார் சுவாமிகளே தெளிவாக கூறியுள்ளார்.
எனவே தற்போதைய கட்டுமானம் பக்தர்களின் விருப்பத்துக்கு எதிரானதாக இருக்கிறது’ என்றார். பக்தர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரத்தில் 2 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கட்டுமானத்துக்காக வள்ளலார் மடத்தின் பகுதியை எடுத்து கொள்வது ஆக்கிரமிப்பாகும்’ என்றார். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமனியன், “இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்படும் கட்டுமானம் என்பது கோயிலில் இருந்து சுமார் 1.9கீ.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடைப்பட்ட பகுதியில் கட்டுமானம் மற்றும் சாலைகளும் உள்ளன. தற்போது கட்டுமான பகுதியில் அமர்ந்து ஜோதியை பார்க்க இயலாது. அந்த ஜோதி மிகவும் சிறியதாகும். எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே உயர்நீதிமன்றம் கட்டுமானத்துக்கு தடை இல்லை என தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் தளம் ஏ மற்றும் தளம் பி உள்ளது. அதில் தளம் பி இடத்தில் கட்டுமானம் மேற்கொள்ள தடையில்லை. அதுவும் தளம் பி பகுதியில் எந்த வணிக வளாகமும் கட்டப்படவில்லை. மாறாக ஒரு சித்தா மருத்துவமனை மட்டும் கட்டுகிறோம்’ என்றனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,”சர்வதேச மையம் கட்டுமானம் என்பது சுமார் 1.9கி.மீ தூரத்தில் உள்ள நிலம் தானே, அது எவ்வாறு வள்ளலார் மடத்தின் மையப்பகுதியை பாதிக்கிறது என்று கூற முடியும். கட்டுமான விவகாரம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 மனுக்கள் நிலுவையில் உள்ளதாக வள்ளலார் பக்கதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கட்டுமானம் அவர்கள் நிலத்தை ஆக்கிரமிப்பாக கருதுவதாக தெரிவிக்கிறார்கள். ஒருவேளை உயர்நீதிமன்றம் கட்டுமானத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பித்தால், அரசு தரப்பில் இடிக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது’ என கேள்வி எழுப்பினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘வள்ளலார் கோயில் மற்றும் தற்போது கட்டுமானம் மேற்கொள்ளப்படும் தளம் பி என்பது இரு வேறு இடங்கள். தளம் பி என்பது கோயிலை விட்டு 1.9 கீ.மீ தூரத்தில் உள்ளது. இந்த பகுதியில் கட்டுமானம் மேற்கொள்ள தடைக்கோரிய ஒரு மனுவை உச்ச நீதிமன்றம் முன்னதாக தள்ளுபடி செய்துள்ளது. அதே கோரிக்கையுடன் மீண்டும் ஒரு மனு உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ளது. இதில் ஏற்கனவே தளம் பி பகுதியில் கட்டுமானம் மேற்கொள்ளக் கூடாது என ஒரு இடைக்கால தடை முன்னதாக பிறப்பிக்கப்பட்டது. தற்போது அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்னர், இந்த விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்கம் செய்கிறது.
அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு தளம் ஏ பகுதியில் கட்டுமானம் மேற்கொள்வது தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள 2 மனுக்களையும் சட்டத்துக்குட்பட்டு அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து உயர்நீதிமன்றம் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் வள்ளலார் சர்வதேச மையம் விவகாரத்தில் கட்டுமான பணிகளை தொடரலாம் என்பது உறுதியாகியுள்ளது.
The post வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.