திருமலை: ஒன்றிய அமைச்சர் பங்கேற்ற மகா ஆரத்தி விழாவில் வாண வேடிக்கையின்போது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் படகுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் 6 ேபர் படுகாயம் அடைந்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள உசேன்சாகர் ஏரி டேங்க்பண்ட் பீப்பிள்ஸ் பிளாசாவில் 76வது குடியரசு தினத்தையொட்டி ‘பாரத மாதா மகா ஆரத்தி’ நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி பங்கேற்றார்.
விழா தொடங்கியபின், பார்வையாளர்களை கவரும் வகையில் ஏரியின் மத்தியில் படகில் இருந்து பலவண்ண பட்டாசுகளுடன் வாணவேடிக்கை நடந்தது. இதற்காக படகில் பட்டாசுகள் நடு ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்ேபாது, பட்டாசுகள் இருந்த 2 படகில் திடீரென தீப்பிடித்தது. பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறியது. படகில் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தண்ணீரில் குதித்தனர். அதற்குள் 6 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக வந்து தண்ணீரில் தத்தளித்த காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் ஏரியில் இருந்த 2 படகுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. முன்னதாக ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் தொடரும் என்று கூறியவுடன் பட்டாசு வெடிக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்த தீ விபத்து நடந்ததால் உடனடியாக நிகழ்ச்சி நிறைவு பெற்றது எனக்கூறிவிட்டு கவர்னர் ஜிஷ்ணு தேவ்வர்மாவும், ஒன்றிய அமைச்சரும் புறப்பட்டு சென்றுவிட்டனர். தீவிபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post வாணவேடிக்கையின்போது பட்டாசு வெடித்து படகுகளில் தீ விபத்து: 6 பேர் படுகாயம்: ஒன்றிய அமைச்சர் பங்கேற்ற விழாவில் பரபரப்பு appeared first on Dinakaran.