தமிழக அரசியல் களத்தில் வந்து சென்ற, வென்று நின்ற திரைப் பிரபலங்கள் எண்ணிக்கை போல் வேறு எந்த அரசியல் களத்திலும் இருந்திருக்காது என்று சொல்லலாம். அதில் முக்கியமான லேட்டஸ்ட் என்ட்ரிதான் நடிகர் விஜய். ‘சினிமாவில் மெகா ஸ்டார்’, ‘அரசியல் அனுபவம் இல்லவே இல்லை’. ‘வயது குறைவு, ஆனால் ஃபேன் பேஸ் பெரிது’… இப்படி பொதுவான பார்வைகள் முன்வைக்கப்படும் நிலையில், எடுத்த எடுப்பிலேயே புனித ஜார்ஜ் கோட்டைதான் இலக்கு என்று பிரகடனப்படுத்திவிட்டு, அதன்பின்னர் பூத் கமிட்டி அமைப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் கட்சி என்றாலும் கூட ‘மாஸ்’ கூட்டங்கள், தேர்தல் வியூக நிபுணர்களின் ஆலோசனை என தன்னை தயார்படுத்திக் கொண்டு கவனிக்கவும் வைக்கிறார் விஜய்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததுமே ‘விஜயகாந்தே நிலைக்க முடியவில்லை, விஜய் எம்மாத்திரம்?!’ என்ற விமர்சனங்கள் எழுந்தது. இந்தச் சூழலில், விஜய் கட்சியின் இளம் தொண்டர்களின் பேரார்வ செயல்களும், அதைக் கட்டுப்படுத்தி ‘ஒழுங்கு’க்கு கொண்டுவரும் விஜய்யின் முயற்சிகளும் அரங்கேறி வருகின்றன. இந்த விஷயத்தில் விஜயகாந்த் அணுகுமுறையை நினைவுகூரும் ஓர் ஒப்பீட்டு விரைவுப் பார்வை இது.