புதுடெல்லி: வெளிநாடு சென்ற மோடி நாடு திரும்பியதும் ஆளும் கூட்டணி கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்த துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவதால் டெல்லியில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு புதியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. துணை ஜனாதிபதி பதவி என்பது, மாநிலங்களவையின் அலுவல் வழி தலைவராக செயல்படும் மிக முக்கிய பொறுப்பாகும். நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை வடிவமைப்பதிலும், அரசாங்கத்தின் முக்கிய சட்ட மற்றும் கொள்கை முடிவுகளை வழிநடத்துவதிலும் இந்த பதவிக்கு முக்கிய பங்குண்டு. எனவே, இந்தப் பதவிக்கான வேட்பாளர் தேர்வு தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதற்காக, மாநிலங்களவையின் பொதுச் செயலாளரை தேர்தல் அதிகாரியாகவும் நியமித்துள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார். தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 782 எம்பிக்களில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 425 எம்.பி.க்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. இதனால், இக்கூட்டணி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியதும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் முழு சம்மதத்துடன், பாஜகவைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருப்பதால், அந்த மாநிலங்களின் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டும் வேட்பாளர் தேர்வு அமையலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என்று ெடல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் எதிர்கட்சிகள் தரப்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு யாரை களத்தில் இறக்கிவிடலாம் என்ற ஆலோசனைகளும் நடந்து வருகிறது. எப்படியாகிலும் தற்போதைய அரசியல் சூழலில் ஆளுங்கட்சி – எதிர்கட்சி தரப்பில் பொதுவான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வாய்ப்புகள் இல்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 782 எம்பிக்களில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 425 எம்.பி.க்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது.
The post விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்; துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?.. டெல்லியில் சூடுபிடிக்கும் அரசியல் களம் appeared first on Dinakaran.