டெல்லி: டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகள் மீது மனித தன்மையற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒன்றிய அரசுக்கு கண்டனம் எழுந்துள்ளது. வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி சம்யுக்தா கிசான் மோட்சா, கிசான் மஸ்தூர் மோட்சா ஆகிய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பஞ்சாப் – ஹரியானா விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர். பஞ்சாப் – ஹரியானா சம்பு எல்லையில் இருப்பு, சிமெண்ட் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்திய போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
மேலும், தடியடி நடத்தி விவசாயிகளை கலைக்க முயன்றதால் பதற்றம் நிலவியது. நொய்டா அருகேயும் பேரணியாக செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது செய்தனர். போலீசாரின் தாக்குதலில் விவசாயிகளின் ஏராளமானோர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர் பதற்றத்துக்கு இடையே விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெறுவதாகவும் அறிவித்தனர்.
இதனிடையே விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அரசின் உணர்வின்மையால் விவசாயிகள் போராடி வருவதாகவும், அவர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக ஏற்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளை தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளால் தாக்கும் மூர்கத்தனத்தை கைவிட்டு ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
The post விவசாயிகள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல்: ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி, கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம்! appeared first on Dinakaran.