திருவனந்தபுரம்: அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், வீரம், தம்பி உள்பட பல தமிழ், மலையாள படங்களில் நடித்தவர் பாலா. பிரபல டைரக்டர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். இந்தநிலையில் கடந்த 2010ம் ஆண்டு பிரபல மலையாள பாடகி அமிர்தா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் அவருக்கு ஒரு மகள் உண்டு. இதற்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து அமிர்தா சுரேஷை பாலா விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2 வதாக திருமணம் செய்த எலிசபெத் என்பவரையும் விவாகரத்து செய்தார். தொடர்ந்து கடந்த வருடம் 3வதாக தன்னுடைய மாமன் மகளை திருமணம் செய்தார். இது ஒருபுறம் இருக்க முதல் மனைவியான அமிர்தா சுரேஷ், நடிகர் பாலா மீது கொச்சி போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் கூறியிருப்பது: பாலாவுடனான விவாகரத்து வழக்கில் இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதில் 5வது பக்கத்தை அவர் போலியாக தயாரித்துள்ளார். மகளின் பெயரில் எடுக்கப்பட்ட இன்சூரன்சில் அவர் முறைகேடு செய்துள்ளார். பிரீமியம் தொகையை அவர் கட்டவில்லை. இன்சூரன்சுக்கான தொகையை திரும்ப எடுத்துக் கொண்டார். வங்கியில் மகளின் பெயரில் டெபாசிட் செய்த ரூ.15 லட்சத்தையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டார். போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளார். எனவே பாலா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமிர்தா சுரேஷ் புகாரில் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து நடிகர் பாலா மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பாலா கூறியுள்ளார்.
The post விவாகரத்து ஒப்பந்தத்தில் முறைகேடு; முதல் மனைவி அளித்த புகாரில் நடிகர் பாலா மீது வழக்கு appeared first on Dinakaran.