நாகர்கோவில்: வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குமரி மாவட்டம் கருங்கல் அருகே மிடாலம் பி வில்லேஜ் பிச்சவிளை பகுதியில் களம்புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 6 வீடுகள் இருந்தன. இந்த வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. மேலும் உரிமையாளர்கள் வீட்டிற்கு உண்டான தீர்வையும் செலுத்தி வந்துள்ளனர். ஆனால், அந்த வீடுகளுக்கு பட்டா இல்லை. இந்நிலையில் கடந்த 2013ல் வருவாய்த்துறையினர் வீட்டின் உரிமையாளர்களுக்கு எந்தவித தகவலும், நோட்டீசும் வழங்காமல் பொக்லைன் உதவியுடன் வீடுகளை இடிக்க வந்துள்ளனர்.
அப்போது இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த ராஜேஷ்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம், முறையாக உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்காமல் வீடுகளை அகற்ற வந்துள்ளீர்கள், அவர்கள் உடமைகளை அகற்றுவதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இது தொடர்பாக வருவாய்த்துறையினர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் மீது கருங்கல் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை நீதிபதி அசன் முகமது விசாரித்து, ராஜேஷ்குமார் எம்எல்ஏ மற்றும் மிடாலம் பகுதியை சேர்ந்த ஆமோஸ், சுபிதா ஆகியோருக்கு தலா 3 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.100 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
The post வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு; எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை: நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.