புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பே காரணம் என்பது உறுதி செய்யப்பட்டதால் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி உத்தரவுகளை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது.
அதன்ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வௌியேற உத்தரவிடப்பட்டது. இதன்படி கல்வி, சுற்றுலா, வணிகம் தொடர்பான குறுகிய கால சார்க் விசா பெற்ற பாகிஸ்தானியர்கள் 27ம் தேதிக்கு முன்பாகவும், மருத்துவ சிகிச்சைக்கான விசா பெற்றவர்கள் 29ம் தேதிக்கு முன்பாகவும் இந்தியாவை விட்டு வௌியேற வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த விசா ரத்து நீண்டகால விசா மற்றும் தூதரக விசா பெற்றவர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானிலுள்ள இந்தியர்களும், இந்திய அதிகாரிகளும் உடனே நாடு திரும்பவும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.
இதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பாகிஸ்தானியர் கூட இல்லை என்பதை அந்தந்த மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்” என அறிவுறுத்தியிருந்தார். நேற்று முதல் பாகிஸ்தானியர்களுக்கான குறுகிய கால விசா ரத்து நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாள்களில் 272 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வௌியேறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “ஏப்ரல் 25ம் தேதி 191 பாகிஸ்தானியர்களும், 26ம் தேதி 81 பாகிஸ்தானியர்களும் அட்டாரி – வாகா எல்லை வழியாக வௌியேறி உள்ளனர். இதேபோல் ஏப்ரல் 25ம் தேதி 287 இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து அட்டாரி – வாகா எல்லை வழியே இந்தியா திரும்பினர். 26ம் தேதி 13 இந்திய அதிகாரிகள் உள்பட 342 இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து திரும்பினர்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்ணீர் மல்க விடைபெறும் உறவுகள்
நாடு திரும்பும் பாகிஸ்தானியர்களும், இந்தியர்களும் தங்கள் உறவுகளுக்கு கண்ணீர் மல்க பிரியா விடை அளித்தும், வழியனுப்பியும் வருகின்றனர். இதுகுறித்து சரிதா என்ற பெண் கூறுகையில், “என் அம்மா இந்தியர். அப்பா பாகிஸ்தானியர். இருவரும் கடந்த 1991ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பாகிஸ்தானியர்களான என் தந்தை, சகோதரர், நான் 3 பேரும் 29ம் தேதி(நாளை) நடக்கும் உறவினர் திருமணத்துக்காக 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தோம். பாகிஸ்தானியர்களை வௌியேற இந்தியா உத்தரவிட்டதால் நாங்கள் திருமணத்தை பார்க்காமல் செல்கிறோம். என் அம்மா இந்தியர் என்பதால் அவரை எங்களுடன் அழைத்து செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இனி என் அம்மாவை நாங்கள் எப்போது பார்ப்போம் என தெரியவில்லை” என கண்ணீர் மல்க கூறினார். இதேபோல் டெல்லியை சேர்ந்த முகமது ஆரிப் தன் அத்தையை அட்டாரி எல்லையில் இறக்கிவிட வந்திருந்தார். அவர், “பஹல்காமில் மனிதர்களை கொன்ற தீவிரவாதிகளை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும்” என கோபாவேசமாக கூறினார்.
ராணுவ உடைகளுக்கு தடை
இதனிடையே ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ராணுவ உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிஷ்த்வார் மாவட்ட துணை ஆணையர் ராஜேஷ் குமார் ஷவான், “தேசவிரோத சக்திகளால் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க கிஷ்த்வாரில் ராணுவ சீருடைகள், போர் வடிவ ஆடைகளை தைக்க, விற்பனை செய்ய, சேமித்து வைக்க தடை விதிக்கப்படுகிறது. போர் ஆடைகளை சேமித்து வைக்க, விற்பனை செய்ய அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை தங்களுக்கான அங்கீகாரம் குறித்த தகவல்களை 15 நாள்களுக்குள் அருகிலுள்ள காவல்நிலையங்களுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்து வணிகத்தை தொடர வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
The post கடந்த 2 நாட்களில் 272 பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வௌியேறினர்: 629 இந்தியர்கள் நாடு திரும்பினர் appeared first on Dinakaran.