மதுரையில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். திமுக-வினர் நடத்திய இந்த முறைகேட்டில் அதிமுக-வினர் சிலருக்கும் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மத்திய குற்றப்புலனாய்வுத் துறை தனிப்படை அமைத்து விசாரித்து வரும் இந்த வழக்கின் முடிவில் யார் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யவுள்ளது. இருந்தாலும், சொத்து வரிமுறைகேட்டை பொறுத்தமட்டில், தமிழக மக்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும்நகராட்சிகளில் பரவலாக நடைபெற்று வரும் ஒன்று தான்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்சி பேதமின்றி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சொத்து வரியை குறைவாக நிர்ணயிப்பது நீண்டகாலமாகவே வாடிக்கையாக நடந்து வருகிறது. லஞ்சம் கொடுக்காதவர்களின் வீடுகளுக்கு கூடுதலாக வரி விதிப்பதும் சாதாரணமாக தமிழகம் முழுக்க பார்க்கக்கூடிய காட்சியாகும்.