அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 18 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கிடைத்ததை அடுத்து ராணா உயர் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். மும்பை குற்றப்பிரிவு போலீசார் மும்பை தாக்குதல் வழக்கில் தஹாவூர் ராணாவுக்கு(64) எதிராக 405 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். கொலை,கொலை முயற்சி, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. மும்பையில் தாக்குதல் மேற்கொள்வதற்காக முக்கிய சதிகாரர் டேவிட் கோல்மேன் ஹெட்லிவுக்கு உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தஹாவூர் ராணா கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது.பல ஆண்டுகள் முயற்சியின் பலனாக இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. அமெரிக்க அதிகாரிகள் ராணாவை இந்திய குழுவினரிடம் ஒப்படைத்ததை அடுத்து, சிறப்பு விமானத்தில் நேற்று முன்தினம் ராணா டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். விமான நிலையம் வந்தடைந்த அவரை என்ஐஏ அதிகாரிகள் முறைப்படி கைது செய்தனர். பின்னர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அதிகாரிகள் அனுமதி கோரினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் ராணாவை 18 நாட்கள் என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராணாவை பலத்த பாதுகாப்புடன் என்ஐஏ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். என்ஐஏ அலுவலகத்தில் அதிக பாதுகாப்பு கொண்ட அறையில் அவர் அடைக்கப்பட்டார். அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை appeared first on Dinakaran.