திருவனந்தபுரம்: சபரிமலைக்கு இந்த வருடம் மண்டல கால பூஜைகளுக்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 21வது நாளான நேற்று இரவு வரை தரிசனம் செய்த மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டி விட்டது. இந்தநிலையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு உதவுவதற்காக கேரள போலீஸ் சார்பில் ஒரு புதிய போர்ட்டல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி வினோத்குமாரின் தலைமையில் சைபர் செல் போலீசார் இந்த போர்ட்டலை உருவாக்கி உள்ளனர்.
https://sites.google.com/view/infopolicepta/home இந்த லிங்கில் கிளிக் செய்தால் சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் கிடைக்கும். இதற்காக தனியாக உருவாக்கப்பட்டு உள்ள க்யூ ஆர் கோடிலும் ஸ்கேன் செய்யலாம். சபரிமலைக்கு எந்தெந்த வழிகளில் செல்லலாம், எங்கெங்கு ஓய்வு எடுக்கலாம், வழியில் உள்ள போலீஸ் நிலையங்களின் எண்கள், உதவி மையங்கள், வாகனங்களை நிறுத்தும் இடங்கள், மருத்துவமனைகள் உள்பட விவரங்கள் கிடைக்கும். சபரிமலை வரும் பக்தர்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது, காலநிலை, அவசர உதவி எண்கள் ஆகியவையும் இந்த போர்ட்டலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
* புல் மேடு வனப்பாதையில் சிக்கிய 2 பெண் பக்தர்கள் மீட்பு
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 20 பக்தர்கள் அடங்கிய ஒரு குழுவினர் புல்மேடு பாதையில் சபரிமலைக்கு புறப்பட்டனர். இந்தக் குழுவில் இருந்த ராதா (58), சாந்தா (60) ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்கள் 2 பேரும் சற்று பின்தங்கினர். இது தெரியாமல் மற்ற அனைவரும் சென்றுவிட்டனர்.
சன்னிதானம் சென்ற பிறகுதான் ராதாவும், சாந்தாவும் தங்களுடன் வரவில்லை என மற்றவர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து போலீசாரிடம் அவர்கள் விவரத்தை கூறினர். உடனடியாக போலீசார், பாதுகாப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு சென்று தேடினர். நீண்ட நேரத்திற்குப் பிறகு ஓடம்பிலாவு வனப்பகுதியில் வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருந்த 2 பேரையும் பாதுகாப்பு வீரர்கள் கண்டுபிடித்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
The post சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கேரள போலீசின் புதிய வழிகாட்டி: க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்தால் அனைத்து விவரங்களும் கிடைக்கும் appeared first on Dinakaran.