திருமலை: சித்தூர் அருகே நேற்று அதிகாலை மதுரை சென்ற ஆம்னி பஸ் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தமிழக பக்தர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து தினமும் மதுரைக்கு டிராவல் ஏஜென்சி மூலம் ஆம்னி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றுமுன்தினம் நள்ளிரவு இந்த ஆம்னி பஸ் 28 பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி புறப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிய தமிழக பக்தர்களும் பயணம் செய்தனர்.
இந்த பஸ் ஆந்திர மாநிலம் சித்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே கங்காசாகரம் கிராமம் அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் வந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு சித்தூர்-தச்சூர் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகிறது. அந்த இடத்தில் வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி, பஸ் மீது எதிர்பாராத வகையில் மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலையின் குறுக்கே பாய்ந்து அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மீதும் மோதியது.
இதில் டிரான்ஸ்பார்மர் மின்கம்பம் குத்தியதில் பஸ்சின் இருக்கையில் இருந்த திருப்பதி சப்தகிரி நகரை சேர்ந்த பொன்சந்துரு, கன்னியாகுமரியை சேர்ந்த ஜீவா உள்பட 4 பேர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். மேலும் இடிபாட்டில் சிக்கி 22 பயணிகள் படுகாயம் அடைந்து அலறி துடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கங்காசாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக 6 பேர் சித்தூர் சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்ற 6 பேர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில், மதுரையை சேர்ந்த பொன்சந்துருவின் குடும்பத்தினர், திருப்பதியில் மளிகைக்கடை வைத்துள்ளனர். பொன்சந்துரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் பொன்சந்துருவின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். அவரது தாய் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திருப்பதியை சேர்ந்த ஸ்ரீதர்(20) மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த ஜீவா, திருச்சியை சேர்ந்த பிரசாந்த் ஆகியோர்விபத்தில் சிக்கி இறந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
The post சித்தூர் அருகே கோர விபத்து ஆம்னி பஸ்- லாரி மோதல் தமிழக பக்தர்கள் உள்பட 4 பேர் பலி: 22 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.