* அத்வானி, ஜோஷி, சுமித்ராவுக்கு ஒரு நியாயம்; மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
டெல்லி: வரும் செப்டம்பரில் மோடி ஓய்வு பெறப் போவதாக பேசப்படும் நிலையில் 75 வயதாகும் தலைவர்களை ஓரங்கட்டுவதில் பாஜக இரட்டை நிலைபாட்டை எடுப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அத்வானி, ஜோஷி, சுமித்ராவுக்கு ஒரு நியாயம்; மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்றது, அங்கு ஆர்.எஸ்.எஸ்-ஐ புகழ்ந்து பேசியது ஆகியவை பல்வேறு அரசியல் விவாதங்களுக்கு தீவிரம் சேர்த்துள்ளது. இதனைச் சுற்றி எழுந்துள்ள அரசியல் பேச்சுக்களில் மிக முக்கியமானது பிரதமர் மோடி விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது ஓய்வை அறிவிப்பார் என்ற செய்திகள் தான்.
அதாவது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் விதிமுறைகளின்படி ஒரு நபர் 75 வயதை கடந்து விட்டால், அவர் கட்சியின் மேலிட பொறுப்புகளில் அங்கம் வகிக்க முடியாது. அதன்படி வரும் செப்டம்பர் 17ம் தேதி வந்தால் பிரதமர் மோடிக்கு 75 வயது பூர்த்தி ஆகிவிடும். அதனால் தான் பிரதமர் மோடி வரும் செப்டம்பருடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா? என்ற அரசியல் விவாதங்கள் தொடங்கியுள்ளன. கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அவ்வப்போது பேச்சுகள் எழுந்தன. மோடியின் தலைமையில் பாஜக தேர்தலை எதிர்கொண்டாலும், தனிநபர் சார்ந்த அரசியலை முன்னெடுத்தது ஆர்எஸ்எஸ்-க்கு பிடிக்கவில்லை. இருப்பினும், அடுத்தடுத்த மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றிக்கு ஆர்எஸ்எஸ் உறுதுணையாகவே செயல்பட்டது.
இப்படியான சூழலில் தான், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில், ‘மோடி தனது ஓய்வை அறிவிக்கவே நாக்பூர் சென்றார்; ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜக தலைமையை மாற்ற விரும்புகிறது’ என்று கூறினார். ஆனால் பிரதமர் மோடி, நாக்பூர் ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பேசிய பாராட்டு உரை, ஆர்எஸ்எஸ் தலைவர்களுடனான சந்திப்பு ஆகியவை ஆர்எஸ்எஸ் – பாஜக உறவில் சமரசத்தை நிகழ்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆர்எஸ்எஸ் குறித்து மோடி பேசுகையில், ‘இந்தியாவின் அழியாத கலாசாரத்தின் ஆலமரம்’ என்று புகழ்ந்தார். இதனால் இரு தரப்பிலும் இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, மகாராஷ்டிரா மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், ‘2029 தேர்தலிலும் மோடி தான் பிரதமராக தொடர்வார்’ என்று குறிப்பிட்டார்.
இருந்தாலும் பாஜகவின் 75 வயது ஓய்வு சூத்திரம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பின்பற்றப்பட்டது என்றும், மற்றவர்களுக்கு பின்பற்றவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய் (அப்போது வயது 90), எல்.கே.அத்வானி ( அப்போது வயது 87), முரளி மனோகர் ஜோஷி (அப்போது வயது 80) ஆகியோர் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து நீக்கப்பட்டனர். அதன்பின் கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அத்வானி (92), முரளி மனோகர் ஜோஷி (85), சுமித்ரா மகாஜன் (76) ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்கள் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட அவர்களுக்கு நேரடி அரசியலில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டது.
அதன் பின் கடந்த 2016ம் ஆண்டு ஜூலையில் ஒன்றிய அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்த போது அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 76 வயதை எட்டிய நஜ்மா ஹெப்துல்லாவை பிரதமர் மோடி அமைச்சரவையில் இருந்து வெளியேற்றினார். கடந்த 2017ல், மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான், தனது அமைச்சரவையில் இருந்த மூத்த தலைவர்களான பாபுலால் கவுர் (87), சர்தாஜ் சிங் (77) ஆகியோரையும் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றினார். காரணம் மோடியின் அமைச்சரவையில் 75 வயதுக்கு மேலானவர்களுக்கு பதவி வழங்கப்படாது என்று கூறப்பட்டது. மேற்கண்ட விதிகளில் விதி விலக்காக அப்போது மூத்த அமைச்சராக இருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா (75) அமைச்சர் பதவியில் தொடர்ந்தார். இதற்கு காரணம் 2017ம் ஆண்டில் உத்தரபிரதேச மாநில பேரவை தேர்தல் நடந்ததால் அவரது பதவி தப்பியது.
அதேபோல் 2021ல் நடந்த மக்களவை தேர்தலின் போது கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் தரன் (88) என்பவரை பாஜக களம் நிறுத்தியது. அப்போது அவரின் வயது பொருட்படுத்தப்படவில்லை. மோடியின் ஓய்வு என்பது அரசியல் களத்தில் பேசப்படுவது இது முதல்முறை அல்ல என்றாலும், ஏற்கனவே பல தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் அளித்த பேட்டி ஒன்றில், ‘வரும் செப்டம்பர் 17ம் தேதி மோடி 75 வயதை எட்டுவதால், அவர் தனது பதவியை அமித் ஷாவிடம் ஒப்படைப்பார்; ஆர்.எஸ்.எஸ் – பாஜக தலைமையை பொருத்தமட்டில், 75 வயது நிரம்பிய தலைவர்கள் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் எல்.கே.அத்வானியை போலவே மோடிக்கும் இந்த விதி பொருந்துமா? என்று கேள்வி எழுப்பிஉள்ளார்.
பாஜக தேசிய தலைவராக இரண்டு முறை பணியாற்றிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி ஒன்றில், ‘75 வயதான தலைவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் வகையில், கட்சியில் எந்த விதியும் இல்லை; ஒரு தலைவரின் சேவை என்பது அவரது உடற்தகுதியைப் பொறுத்தது. நான் 2009ம் ஆண்டு பாஜக தலைவராக இருந்தேன்; 2013ம் ஆண்டு மீண்டும் தலைவரானேன். அப்போது எனது வயது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. பாஜகவின் கட்சிவிதிகளின்படி வயது வரம்பு என்று தனியாக விதி ஏதுமில்லை’ என்றார். ஆனால் 75 வயதான பாஜகவின் முக்கியத் தலைவர்கள் சிலர், கட்சியின் தேசிய தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் தங்களது அரசில் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். அப்போதிருந்தே 75 வயதில் ஓய்வு குறித்த விவாதம் நடந்து வருகிறது.
குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்ற முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்; அவருக்குப் பதிலாக அமித் ஷா அந்த தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். அத்வானியை போன்றே முரளி மனோகர் ஜோஷியும் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கான்பூரில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனும், இந்தூர் தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தார். மேற்கண்ட தலைவர்கள் 75 வயதை கடந்த நிலையில் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் தான் பாஜகவின் 75 வயது ஓய்வு திட்டம் என்பது இரட்டை நிலைபாடுகளுடன் தொடர்புடையது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வரும் செப்டம்பர் 17ம் தேதி மோடி 75 வயதை எட்டுவதால், அவர் தனது பதவியை அமித் ஷாவிடம் ஒப்படைப்பார்; ஆர்.எஸ்.எஸ் – பாஜக தலைமையை பொருத்தமட்டில், 75 வயது நிரம்பிய தலைவர்கள் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் அத்வானியை போலவே மோடிக்கும் இந்த விதி பொருந்துமா?’ என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.
நேருவின் சாதனையை முறியடிக்க திட்டம்?
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தலைவராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகவும் இருந்த ஜவாஹர்லால் நேரு, கடந்த 1947 ஆகஸ்ட் 15 முதல் 1964 மே 27 வரை பிரதமர் பதவி வகித்தார். சுதந்திர இந்தியாவின் தொடக்கத்திலிருந்து அவர் மறைவு வரையிலான காலமாகும். மொத்தம் அவர் 16 ஆண்டுகள் 9 மாதங்கள் பிரதமராக இருந்தார். பாஜக தலைமையை பொருத்தமட்டில் காங்கிரசின் சாதனைகளை முறியடிப்பதே நோக்கமாக கொண்டுள்ளது. பிரதமர் மோடியை பொருத்தமட்டில் அவர் 2014ம் ஆண்டு மே 26ம் தேதி முதன்முதலாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அவர் தனது முதல் பதவிக் காலத்தை 2014 முதல் 2019 வரை நிறைவு செய்தார். அதன் பின்னர், 2019ம் ஆண்டு மே 30ம் தேதி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
கடந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறாவிட்டாலும் கூட, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி கடந்தாண்டு ஜூன் 9ம் தேதி மூன்றாவது முறையாக பதவியேற்றார். இந்த பதவி காலத்தை மோடி முழுமையாக நிறைவு செய்தால், அடுத்த பொதுத் தேர்தல் 2029ம் ஆண்டில் நடைபெறும். அப்போது மோடி 15 ஆண்டுகள் பிரதமராக பதவியில் வகித்தவர் என்ற பெருமையை பெறுவார். ஆனால் நேரு கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்ததால், அந்த சாதனையை முறியடிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போதைய மோடியின் ஓய்வு குறித்து பேசப்படும் நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘பிரதமர் மோடி பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவருக்கு மாற்றாக வேறு ஒருவரை தேடவேண்டிய அவசியம் இல்லை. அவர் எங்களது தலைவர். தொடர்ந்து பதவியில் நீட்டிப்பார். பிரதமர் மோடி எங்களுக்கு தந்தையை போன்றவர். வரும் 2029ம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமராவார். நமது கலாசாரப்படி தந்தை உயிரோடு இருக்கும் வரை அவரது இடத்திற்கான அடுத்த தேர்வு குறித்து பரிசீலிக்க மாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.
The post செப்டம்பரில் மோடி ஓய்வு பெறப் போவதாக பேசப்படும் நிலையில் 75 வயதாகும் தலைவர்களை ஓரங்கட்டுவதில் பாஜக இரட்டை நிலைப்பாடு appeared first on Dinakaran.