கொல்கத்தா: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குடியுரிமையினை சரிபார்ப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பின்பற்றிய செயல்முறையே போதுமானது என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கருத்து குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு மற்றும் பிறருக்கு எதிராக மாணிக் ஃபகிர் என்ற மாணிக் மண்டல் தாக்கல் செய்த பொது நல வழக்கு (பிஐஎல்) தொடர்பாக இந்த தீர்ப்பு வந்துள்ளது. இவ்வழக்கில் இந்திய தேர்தல்களில் வெளிநாட்டினரின் பங்கேற்பு குறித்து மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். மேலும் 2026 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, வேட்பாளர்களின் குடியுரிமை சரிபார்ப்பு குறித்து சரியான முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
வெளிநாட்டினர் சட்டவிரோதமாக இந்திய குடியுரிமை பெறுவது ஜனநாயக செயல்முறைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குடியுரிமையை சரிபார்க்க புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நிறுவதற்கு நீதித்துறை தலையீட்டை மனுதாரர் கோரினார்.
இருப்பினும், தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம் மற்றும் நீதிபதி சைதாலி சாட்டர்ஜி ஆகியோர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளிட்ட விரிவான சட்ட கட்டமைப்புகளின் கீழ் தேர்தல் ஆணையம் ஏற்கனவே செயல்படுகிறது என்பதை தெளிவுபடுத்தியது. தேர்தல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் ஆணையத்தின் பொறுப்பு தொடங்குகிறது. மேலும் அனைத்து வேட்புமனுக்களும் உரிய ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது.
மனுதாரரின் கோரிக்கையான வேட்பாளரின் குடியுரிமை குறித்த புதிய சரிபார்ப்பு நெறிமுறையானது சட்டமன்றம் தொடர்புடையது என்றும் இது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 226 இன் கீழ் செயல்படும் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் இல்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். விசாரணையின் போது, தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், தற்போதைய செயல்முறையே போதுமானது என எடுத்துரைத்தார். இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஒரு வேட்பாளரின் தகுதி அல்லது குடியுரிமைக்கு எதிராக முறையாக தாக்கல் செய்யப்படும் எந்தவொரு ஆட்சேபனையும் ஆணையத்தால் முழுமையாக விசாரிக்கப்படும் என்று வலியுறுத்தியது.
முக்கியமாக, நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு வேட்பாளரின் வேட்புமனு குறித்து ஆட்சேபனைகளை முறையான சட்ட வழிகள் மூலம் தெரிவிக்க குடிமக்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை நீதிமன்றம் நினைவூட்டியது. இந்தக் கருத்துகளுடன், தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நடைமுறையே போதுமானது என்பதை உறுதிப்படுத்தி, உயர்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
The post தற்போதைய வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் குறித்த தேர்தல் ஆணையத்தின் செயல்முறையே போதுமானது என நீதித்துறை கருத்து appeared first on Dinakaran.