ஆக்ரா: தாஜ்மகால் உண்மையான அன்புக்கான சான்று என்று அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் புகழ்ந்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் தாஜ்மகாலை பார்வையிட்டார். நேற்று ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ரா விமான நிலையத்திற்கு வந்திறங்கினார்கள். அங்கு அவரை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் தளத்தில், காலத்தால் அழியாத பக்தி, துடிப்பான கலாச்சாரம் மற்றும் ஆன்மிக மரபுக்கு பெயர் பெற்ற இந்தியாவின் புனித மையமான உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அன்பான வரவேற்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் துணை அதிபர் வான்ஸ் குடும்பத்தினர் தாஜ்மகால் வரை காரில் பயணம் செய்தனர். தாஜ்மகாலை குடும்பத்துடன் வான்ஸ் கண்டு மகிழ்ந்தார். பின்னர் அவர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில், தாஜ்மகால் அற்புதமானது. உண்மையான அன்புக்கான சான்று, மனித புத்திகூர்மை மற்றும் இந்தியா என்ற மகத்தான நாட்டிற்கான மரியாதை என்று குறிப்பிட்டுள்ளார். துணை அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெய்ப்பூரில் உள்ள சிட்டி பேலஸ் செல்வதற்கு திட்டமிட்டு இருந்தனர். பின்னர் தங்களது பயணத்தை அவர் ரத்து செய்தனர். இன்று அவர்கள் அமெரிக்கா திரும்பி செல்கின்றனர்.
The post தாஜ்மகால் உண்மையான அன்புக்கான சான்று: அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் புகழாரம் appeared first on Dinakaran.