புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவராக இருந்தவர் குந்தல் கோஷ். மேற்கு வங்க தொடக்கப் பள்ளி ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் இவரை அமலாக்கத் துறையும், சிபிஐயும் கடந்த 2023 ஜனவரியில் கைது செய்தன. அப்போது முதல் கோஷ் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவருக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஜாமீன் வழங்கியது.
சிபிஐ வழக்கில் ஜாமீன் கேட்டு கோஷ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோஷ் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் சிபிஐ இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால் விசாரணை எப்போது முடிவடையும் என்று தெரியாத நிலை உள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் குந்தல் கோஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். எந்த வித பொது ஊழியர் பதவியையும் ஏற்கக் கூடாது என்றும் வழக்கு குறித்து கருத்து சொல்லக் கூடாது என்று அவருக்கு நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
The post திரிணாமுல் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் appeared first on Dinakaran.