இந்தியா, கட்டுரை, சிந்தனைக் களம், தொழில்நுட்பம்

மொபைல் ஆப் பணப்பரிமாற்ற செயலிகள் ஆபத்தானதா?

mobile-app-transfer-dangerous

mobile-app-transfer-dangerous

போன் வாலெட் எனப்படும் கூகுள்பே,    போன்பே, ஏர்டெல்மணி, அமேசான் பே போன்ற பல்வேறு மொபைல் ஆப் பணப்பரிமாற்ற செயலிகள் ஏகப்பட்டவை உள்ளன. இதன் மூலம் ஒரு நொடியில் பணத்தை ஒரு கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு மாற்றிவிடலாம். இதற்கு வங்கியில் கொடுத்துள்ள மொபைல் போன் எண் மட்டும் இருந்தால் போதும். பெயர் கூட தேவையில்லை. அதையும் மொபைல் ஆப்பே வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயரை தானே யூபிஐ மூலம் சேகரித்துக் கொள்ளும். இப்படி வாடிக்கையாளர் பற்றி எந்த ஒரு தகவலையும் சேமித்து வைத்துக் கொள்ளாமல், மொபைல் எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு பணப்பரிமாற்றத்துக்கு உதவுகின்றன இந்த செயலிகள். போன் நிறுவனம் ஒன்று, அதன் சிம் கார்டை வாங்கினாலே, சம்பந்தப்பட்டவரை தன்னுடைய பணப்பரிமாற்ற செயலில் வாடிக்கையாளராக சேர்த்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது. இதுபற்றி வங்கிக்கு ஏகப்பட்ட புகார்கள் சென்றதை தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் கேஒய்சி எனப்படும் சுயவிவரங்களை சேகரித்து வைத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி கெடு விதித்தது.

ஆனால், இந்த செயலிகளின் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் விடுத்த தொடர் கோரிக்கையை தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதி வரையிலான கெடு, வரும் ஆகஸ்ட் 31ம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இன்னமும் 70 சதவீதம் வரை இந்த செயலிகளில் தங்களுடைய முழுவிவரங்களை தாக்கல் செய்யாமலேயே பணப்பரிவர்த்தனைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பின்னரும் அவர்கள் மீண்டும் காலநீட்டிப்பு கோரி நிர்ப்பந்தப்படுத்தலாம். ஆனால், இதற்கு எந்த இடமும் தராமல், ரிசர்வ் வங்கி உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியம்.

பணமில்லா பரிவர்த்தனைக்கு இந்த செயலிகள் மிகப்பெரிய அளவில் உதவினாலும், வருங்காலத்தில் அதன் மூலம் பல்வேறு பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று அவற்றுக்கு கெடு விதிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து கெடுவை நீட்டிப்பது அரசுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே அறிவித்தபடி, கேஒய்சி சேகரிக்காத சில நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுவதில் எந்த தளர்வும் இருக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *