மதுரை: தென்காசி மாவட்டத்தில் அடர்வனம் அருகே உள்ள 350 ஏக்கர் பட்டா நிலத்தில் மரங்கள் வெட்ட தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கல்லத்திகுளம் கலா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆலங்குளம் தாலுகா மாறாந்தை கல்லத்தி குளம் கிராமத்தில் 350 ஏக்கர் நிலத்தில் உள்ள சுமார் 8 லட்சம் அரிய வகை மரங்கள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன். இந்த மரங்களை சோலார் கம்பெனி அமைப்பதற்காக தனியார் நிறுவனம் அகற்றி வருகிறது. இதற்கு தடை விதித்து, 350 ஏக்கர் காடுகளை அரசு கையகப்படுத்தி, நிலத்தை காவல் குட்டி பரம்பை அடர் வனப் பகுதியுடன் சேர்க்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.