சென்னை: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிவிப்பை வரும் 29 ஆம் நாள் விழுப்புரத்தில் நடைபெறவிருக்கும் இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்கள் மணிமண்டப திறப்பு விழாவில் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதம்: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பூர்வ பணிகள் தாமதமாகி வரும் நிலையில், அது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கான இயல்பான சூழல் உருவாகியிருப்பதை தங்களுக்கு சுட்டிக்காட்டுவதற்காகவும், அந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவும் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.