புதுடெல்லி: நொய்டாவில் திடீரென தீ பிடித்து கழிப்பறை கோப்பை வெடித்து சிதறியதால் வாலிபருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் சுனில் பிரதான். இவரது மகன் ஆஷு (20) கடந்த சில நாட்களுக்கு முன் கழிப்பறைக்கு சென்று, அங்கிருந்த வெஸ்டர்ன் டாய்லட்டின் தண்ணீர் பட்டனை அமுக்கி உள்ளார். அப்போது, கழிப்பறை கோப்பை தீ பிடித்து திடீரென வெடித்து சிதறியது. அதில், ஆஷூவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. மேலும், டாய்லட்டின் உடைந்த பாகங்கள் குத்தியதில் உடலின் சில பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. இதனால், அவர் அலறி துடித்தார்.
சத்தம் கேட்டு உள்ளே ஓடிவந்த சுனில் பிரதான் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மகனை அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்தபோது 35 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், கழிப்பறையில் எந்த மின்கசிவும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. விபத்து நடந்த பகுதியில் கழிவுநீர் குழாயில் உள்ள அடைப்புகள் காரணமாக அதிகளவு மீத்தேன் வாயு உருவாகி கழிப்பறை கோப்பை முழுவதும் நிறைந்து இருந்து இருக்கும். அதிகளவு வெப்பம் ஏற்பட்டு தீ பிடித்து வெடித்து சிதறி இருக்கும் என்று கூறப்படுகிறது.
The post நொய்டாவில் பயங்கரம்: கழிப்பறை கோப்பை வெடித்து வாலிபருக்கு தீ காயம் appeared first on Dinakaran.