திருமலை: பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் அவர்களை தேடி தேடி ஒழிக்கவேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் கூறினார். ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் இறந்தனர். அவர்களில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன்ராவ் சோமிசெட்டியும் ஒருவர். அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு துணை முதல்வர் பவன்கல்யாண் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து பவன்கல்யாண் நிருபர்களிடம் கூறியதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் கொடூரமானவை. பயங்கரவாதிகள் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கொடூரமாகவும், குறி வைத்தும் கொன்றுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கும். காஷ்மீரில் தோட்டாக்கள் வெடித்தால், அதன் தாக்கம் நாடு முழுவதும் உணரப்படும் என்பதற்கு பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சான்றாகும்.
இனி பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும், அவர்களைத்தேடி தேடி ஒழிக்க வேண்டும். குடும்பத்தினரிடம் துயரத்தைக்கேட்டு என் இதயம் நொறுங்கியது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அமைச்சர்கள் நாதெள்ள மனோகர், ஆனம் ராமநாராயண ரெட்டி, சத்யகுமார்யாதவ், எம்எல்ஏக்கள் சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி, வெங்கடகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும்: ஆந்திர துணை முதல்வர் ஆவேசம் appeared first on Dinakaran.