அமிர்தசரஸ்: அசாம் சிறையில் இருக்கும் சுயேட்சை எம்பி அமிர்தபால் சிங், வரும் 14ம் தேதி பஞ்சாபில் புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார். அசாம் மாநிலம் திப்ருகர் சிறையில் இருக்கும் எம்பியும், காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளருமான அமிர்தபால் சிங், அஜ்நாலா காவல் நிலையம் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கடந்தாண்டு ஏப்ரலில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வரும் 14ம் தேதி பஞ்சாப்பின் முக்த்சாரில் ‘பந்த் பச்சாவோ, பஞ்சாப் பச்சாவோ’ நடைபெறும் மாகி மேளாவில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
அப்போது புதிய அரசியல் கட்சி தொடங்குவது என்றும், கட்சியின் பெயர் குறித்து முடிவு செய்ய ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனை அமிர்த பால் சிங்கின் தந்தை தர்செம் சிங் உறுதிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையாளி பியாந்த் சிங்கின் மகன் ஃபரித்கோட் எம்பி சரப்ஜித் சிங் கல்சா மற்றும் மனித உரிமை ஆர்வலர் பரம்ஜித் கவுர் கல்சா உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக சிறையில் இருந்து போட்டியிட்ட அமிர்த பால் சிங், 1,97,120 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post புதிய கட்சியை தொடங்கும் சிறையில் இருக்கும் எம்பி: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.