புதுடெல்லி: வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்பு வாரியத்தில் வேறு மதத்தினரை நியமிப்பது ஏன்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை ஒன்றிய அரசிடம் நீதிபதிகள் கேட்டனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்றும் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் வழங்கிய நிலையில், தற்போது அது சட்டமாக நடைமுறையில் உள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உட்பட மொத்தம் 140 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதத்தில்,” வக்பு வாரிய திருத்த சட்டம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இந்த விவகாரத்தில் சட்டப்பிரிவு 26ஐ விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை என்பது இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களின் மதரீதியான சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை என்பது அரசியலமைப்புக்கு எதிரானதாகும். ஜமா மசூதி உட்பட அனைத்து பழங்கால நினைவுச் சின்னங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த 1995ம் ஆண்டு மத்திய வக்பு கவுன்சிலின் பரிந்துரைக்கப்பட்ட அனைவரும் முஸ்லிம்கள் ஆவார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது விதி மீறல் நடந்துள்ளது. ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்துள்ள வக்பு சட்டத் திருத்தத்தால் எந்தவித நல்லதும் நடைபெறாது. குறிப்பாக வக்பு உருவாக்கப்பட்டு 300 ஆண்டுகள் ஆகியுள்ளது.
வக்பு இடத்தை பதிவு செய்வதில் சில சிக்கல்கள் இருக்கிறது. முதலில் இதுகுறித்து ஆய்வு செய்ய தனி ஆணையம் அமைத்து செயல்படுத்தி இருக்க வேண்டும். வக்பு என்பது இஸ்லாமிய மதத்தின் ஒருங்கிணைந்த ஒன்றாகும். ராமஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பில் கூட அது அங்கீகரிக்கப்ப்பட்டுள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இஸ்லாமிய உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஒழுக்கம், சுகாதாரம் போன்றவற்றுக்கு உட்பட்டு ஒருவரை முஸ்லிம் என்று சான்றளிக்க அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் தகுதிக்கான காலம் தேவைப்படுகிறது. இதனை எப்படி ஏற்க முடியும். மேலும் ஐந்து ஆண்டுகள் இஸ்லாமியர்களாக இருந்தால் தான் நன்கொடை வழங்க முடியும் என்பது இஸ்லாமியர்களின் மத உரிமைகளுக்கு எதிரானதாகும். இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘வக்பு வாரிய சட்டத் திருத்தம் விவகாரத்தை பொறுத்தவரை ஊர் ஊராக சென்று கருத்துக்கள் கேட்கப்பட்டது. குறிப்பாக பெரிய நகரங்களில் விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில்தான் சட்டம் இயற்றப்பட்டது. குறிப்பாக 38 முறை ஆலோசனை அமர்வு கூட்டம் நடத்தப்பட்டது. சுமார் 92 லட்சத்திற்கும் மேலான பரிந்துரைகள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்துதான் நாடாளுமன்றத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரம் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக நீடித்து வருகிறது. இஸ்லாமியர்கள் தர்மம் செய்ய விரும்பினால் தாராளமாக அறக்கட்டளையின் மூலமாக செய்யலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை. இருப்பினும் வக்பு வாரிய சட்டத் திருத்தம் குறித்து எங்களது விளக்கத்தை நாங்கள் பிரமாணப் பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம். அதற்கு இரண்டு வாரமாவது அவகாசம் வழங்க வேண்டும்.
மேலும் இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையான இடைக்கால தடை என்பதை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அதில்,‘‘இந்த விவகாரத்தில் நாங்கள் ஒன்றை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறோம். அதாவது இந்துக்களுக்கு அரசு தான் சட்டத்தை இயற்றி உள்ளது. அதேப்போன்று முஸ்லிம்களுக்கும் நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்றி உள்ளது. ஆனால் இதில் பாரபட்சம் கொண்ட பாகுபாடு இருப்பது ஏன்?. குறிப்பாக பட்டியல் மற்றும் பழங்குடியினரின் சொத்துக்களை அனுமதி இல்லாமல் மாற்றம் செய்ய முடியாது என்று சட்டம் இல்லையா?. அதனை ஏன் ஒன்றியஅரசு கருத்தில் கொள்ளவில்லை. வக்பு வாரிய சட்ட திருத்தம் விவகாரத்தில் நாங்கள் கற்காலத்திற்கு செல்ல விரும்பவில்லை.
இருப்பினும் அதில் இருக்கும் பிரச்னைகளை கண்டிப்பாக ஆய்வு செய்து தான் ஆக வேண்டும். அதாவது டெல்லி உயர்நீதிமன்றம் வக்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று எங்களிடம் கூறப்படுகிறது. வக்பு செய்யப்படும் அனைத்திலும் தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் அதில் உண்மையான கவலை எங்களுக்கு உள்ளது. மேலும் வக்பு என்பது பயனரால் தீர்ப்பாலோ அல்லது வேறு விதமாகவோ நிறுவப்பட்டால் அது இன்று செல்லாது என்று ஒன்றிய அரசு கூறுகிறது. அதனை எப்படி அனுமதிக்க முடியும். மேலும் வக்பு என்பது ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னதாக இஸ்லாமியர்களால் நிறுவப்பட்டு விட்டது. அதில் தலையீடு இருக்க முடியுமா என்பது எங்களது முக்கிய கேள்வியாக இருக்கிறது. மேலும் இந்து அறநிலையத்துறை மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும் என்று சட்டம் உள்ளது.
ஆனால் வக்பு சட்டத்தில் மட்டும் புதிய நடைமுறையை ஒன்றிய அரசு கொண்டு வந்தது ஏன்? குறிப்பாக தற்போது சட்டமாக இருக்கும் வக்பு சட்டத்தால் நிலத்தை பதிவு செய்வது என்பது மிகவும் கடினம் ஆகும். இவ்வளவு வாதங்களை முன்வைக்கும் ஒன்றிய அரசு இஸ்லாமியர்களை இந்து கோயில் அறக்கட்டளையில் அனுமதிப்பீர்களா. நாங்கள் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையோ அல்லது ஆணையையோ நாடாளுமன்றம் செல்லாது என்று அறிவிக்க முடியாது. மேலும் தற்போது இருக்கும் பல மசூதிகள் 13, 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவையாகும். அதற்கு விற்பனை பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று எப்படி கேட்க முடியும். அது கண்டிப்பாக சாத்தியமற்றது ஆகும். மேலும் வக்பு சொத்துக்கள் எது? அது வக்பு சொத்தா? இல்லை அரசு சொத்தா என்பதை அரசு அதிகாரியான மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வது நியாயமா? என்று கேட்டனர்.
பின்னர், பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘வக்பு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பாக தற்போது நாங்கள் இடைக்காலமாக எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. அதில் அனைத்து விவரங்களும் விரிவாக இருக்க வேண்டும். மேலும் வக்பு வாரியத்தில் தற்போது இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமனம் என்பது செல்லத்தக்க ஒன்றாகும். இருப்பினும் அவர்களை தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ உறுப்பினர்களை நியமிக்கலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது. அதேப்போன்று வக்பு நிலங்களை ஆய்வு செய்யும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது பணிகளை தொடர்ந்து செய்யலாம். அதுகுறித்து நாங்கள் தற்போது எதுவும் கூறவில்லை என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஒத்திவைத்தனர்.
வழக்கை நாங்கள் விசாரிக்க முடியாது என்பதா? ஒன்றிய அரசு வக்கீலை கண்டித்த தலைமை நீதிபதி
விசாரணையின்போது, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். ‘இந்து கோயில்களை நிர்வகிக்கும் குழுக்களில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை அரசு நியமிக்குமா? என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதிலளிக்குமாறு துஷார் மேத்தாவை பார்த்து அவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, அப்படி பார்த்தால், இந்த வழக்கை நீங்கள் கூட விசாரிக்க முடியாது என்றார்.
இதை கேட்டதும் கோபமடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்ணா, நீதிபதிகள் அனைவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்ததும் மதசார்பற்றவர்களாக மாறிவிடுகிறோம். எங்களுக்கு வாதியும், எதிர்வாதியும் ஒன்றேதான். நாங்கள் இந்து கோயில்களை நிர்வகிப்பது பற்றி கேள்வி கேட்டால், அதை எப்படி நீதிபதிகளுடன் நீங்கள் ஒப்பிடுவீர்கள் என்று கண்டனம் தெரிவித்தார்.
திமுக தரப்பில் வாதம்
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘வக்பு வாரிய சட்ட திருத்தம் என்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டம் என்பது இஸ்லாமியர்களை ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைப்பதற்கு சமமாக அமைந்துள்ளது. சட்டப்பிரிவு 26 அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. குறிப்பாக பொது ஒழுங்கு, சுகாதாரம் மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரானதாக இருந்தால் மட்டுமே இந்த உரிமைகளை கட்டுப்படுத்தும் விதமாக சட்டம் இயற்ற முடியும். ஆனால் ஒன்றிய அரசின் தற்போதைய நடவடிக்கை என்பது சட்ட விதிகள் அனைத்திற்கும் புறம்பானதாக உள்ளது என்று காரசாரமாக தெரிவித்தார்.
பல மசூதிகள் 13, 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவையாகும். அதற்கு விற்பனை பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று எப்படி கேட்க முடியும்? வக்பு சொத்துக்கள் அரசுக்கு சொந்தமானதா? என்பதை அரசு அதிகாரியான மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வது நியாயமா?
The post புதிய சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்குகள் விசாரணை வக்பு வாரியத்தில் வேறு மதத்தினரை நியமிப்பது ஏன்?.. ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.