பெங்களூரு: யூடியூப் பார்த்து தங்கம் கடத்துவது எப்படி என்று தெரிந்து கொண்டேன். தங்க கடத்தலில் முதன் முறையாக தான் ஈடுபட்டேன் என்று நடிகை ரன்யா ராவ் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தங்கம் கடத்தல் வழக்கில் கைதான ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளிடம் அளித்துள்ள விளக்கத்தில், ‘மார்ச் 1ம் தேதி எனக்கு ஒரு வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. கடந்த 2 வாரங்களாக தெரியாத வெளிநாட்டு எண்களிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. துபாய் விமான நிலையத்தின் முனையம் 3ல் உள்ள கேட் ஏ-வுக்குச் செல்லுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது.
துபாய் விமான நிலையத்தில் தங்கத்தை சேகரித்து பெங்களூருவில் டெலிவரி செய்யுமாறு என்னிடம் கூறப்பட்டது. துபாயிலிருந்து பெங்களூருவுக்குத் தங்கத்தை எடுத்து வந்தது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு நான் துபாயிலிருந்து தங்கத்தைக் கொண்டு வந்ததோ, வாங்கியதோ இல்லை. யூடியூப் பார்த்து தங்கத்தை எப்படி மறைப்பது என்று கற்றுக்கொண்டேன். விமான நிலையத்தில் இருந்து பேன்டேஜ்கள் மற்றும் கத்தரிக்கோல் வாங்கி, விமான நிலையத்தில் உள்ள கழிப்பறை ஒன்றில் தங்கக்கட்டிகளை என் உடலில் மறைத்து வைத்தேன். 2 பிளாஸ்டிக் மூடிய பாக்கெட்டுகளில் இருந்த தங்கத்தை மறைத்து எடுத்து வந்தேன்.
என்னை தொலைபேசியில் அழைத்தது யார் என்று தெரியாது. தங்கக்கட்டிகளை என்னிடம் இருந்து வாங்கியதும் சென்றுவிட்டார். அவர் 6 அடி உயரம் கொண்ட, நல்ல வெள்ளை நிறமான நபர். சிக்னல் ஒன்றின் அருகே இருந்த ஆட்டோவில் தங்கத்தை வைக்குமாறு கூறினர். நானும் அப்படியே செய்தேன். நான் போட்டோ எடுக்க மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக துபாய்க்கு அதிக முறை பயணம் செய்தேன். ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பலமுறை பயணம் செய்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார் அவரைத் தொடர்புகொண்டு பேசி வழிநடத்திய நபரைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க மறுத்திருக்கிறார். இதற்கிடையே சிஐடி போலீசார் விசாரணை நடத்த போடப்பட்ட உத்தரவை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது.
The post யூடியூப் பார்த்து தான் கற்றுக்கொண்டேன் தங்கம் கடத்தியது இதுவே முதல் முறை: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம் appeared first on Dinakaran.