செங்கல்பட்டு: “தமிழகத்தின் வளர்ச்சி என்பது, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தனித்தன்மை வாய்ந்தது. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழகம் மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து தெரிகிறது என்று உலகத்துக்கே தெரியும். அதனால்தான் தமிழகத்தில் முதலீடுகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 10) செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார். பின்னர் இந்நிகழ்வில் முதல்வர் பேசியதாவது: “தமிழக அரசுக்கும், கோத்ரேஜ் நிறுவனத்துக்கும் இது ஒரு வெற்றிகரமான நிகழ்வு. 515 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், 1,010 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது. கோத்ரெஜ் நிறுவனத்தின் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டோம். அடுத்த ஐந்தே மாதத்தில் அதாவது, 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது அடிக்கல் நாட்டப்பட்டது.