டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜக ரூ.1700 கோடிக்கு மேல் செலவிட்டது அம்பலமாகி உள்ளது. தேர்தல் பாத்திரம் மூலம் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் பாஜக நன்கொடை வசூலித்த விவரம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. சிபிஐ அமலாக்கத்துறை வருமானவரி சோதனை போன்ற நடவடிக்கைகளுக்கு பயந்து பலரும் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியதும் அம்பலமானது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக மொத்தம் ரூ.1737 கோடி செலவு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இது நாட்டின் 7 பிரதான கட்சிகள் செலவழித்த தொகையை விட ரூ.680 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரூ.1492 கோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் 245 கோடி 441 வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக விநியோகிக்க பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தில் பாஜக தெரிவித்துள்ளது.
2019 மக்களவை தேர்தலில் 1264 கோடி மட்டுமே செலவிட்ட பாஜக 2024 தேர்தலில் அதை விட 37 சதவீதம் அதிகம் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜகவை பொறுத்தவரை அதன் செலவில் கணிசமான பங்கு அதாவது ரூ.611 கோடி விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகையில் 2024 ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை கூகுள் இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ.156.95 லட்சமும் மார்ச் முதல் ஜூன் வரை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.24 கோடியே 63 லட்சம் ரூபாயும் செலுத்தி உள்ளது.
மேலும் பாஜக 2 சர்வே பணிகளுக்காக ரூ.19 கோடி செலவிட்டதும் அம்பலமாகி உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 2024 மக்கலவைத்தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய சட்டமன்ற தேர்தல்கள் என மொத்தம் 686 கோடி செலவு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள்ளும் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள்ளும் அரசியல் காட்சிகள் தங்களது தேர்தல் செலவு விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக வாரி இறைத்த பாஜக: கட்சிகளின் செலவினக் கணக்கை வெளியிட்ட தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.