உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகாகும்பமேளா நடந்து முடிந்து விட்டது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிப்பதாக கருதப்படும் அந்த நகரில் ஜன.13ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா, மகாசிவராத்திரியான நேற்று முன்தினம் பிப்.26ம் தேதி நிறைவுக்கு வந்தது. நாடு முழுவதும் இருந்தும் 66 கோடி பக்தர்கள் அங்கு சென்று புனித நீராடியுள்ளனர். 45 நாட்களில் 66 கோடி மக்கள் ஒரே இடத்தில் ஒன்று திரண்டது, உலகின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த மகா கும்பமேளா உலகின் மிக பெரிய ஆன்மிக ஒன்றுகூடலாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடி மகிழ்ந்தனர். ஏனெனில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒன்றுகூடும் இடத்தில் புனித நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினர்.
தினம், தினம் நாடு முழுவதும் பிரயாக்ராஜ் நகரை ேநாக்கி மக்கள் வெள்ளம் படையெடுத்த வண்ணம் இருந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, பூடான் நாட்டு மன்னர் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், திரைபிரபலங்கள் இந்த மகாகும்பமேளாவில் கலந்து ெகாண்டு புனித நீராடினார்கள். மகாகும்பமேளாவில் அதிகபட்சமாக மவுனி அமாவாசை அன்று கிட்டத்தட்ட 8 கோடி பக்தர்கள் புனித நீராடினர். அதற்கு அடுத்தபடியாக மகர சங்கராந்தி அன்று 3.5 கோடி பேர் புனித நீராடினர்.
கடைசி நாளான மகாசிவராத்திரி தினத்தில் 1.40 கோடி பக்தர்கள் புனித நீராடினார்கள். சராசரியாக கணக்கிட்டால் பிரயாக்ராஜ் நகரை சுற்றி எப்போது பார்த்தாலும் ஒன்றரை கோடி பக்தர்கள் வருவதும், ஒன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடிவிட்டு செல்வதுமாக இருந்தனர். மகாகும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் நகர் மட்டுமல்ல காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ள வாரணாசி, அயோத்தி உள்ளிட்ட நகரங்களும் பக்தர்கள் வெள்ளத்தால் திணறிவிட்டது. ஒட்டு மொத்தத்தில் மகாகும்பமேளாவால் மிகப்பெரிய வருவாய் மற்றும் மக்கள் கூட்டத்தை பெற்று இருக்கிறது உத்தரபிரதேச மாநிலம்.
அதனால் தான் இந்த நிகழ்வை உண்மையான உலகளாவிய நிகழ்வு என்று விவரித்தார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். நேற்று பிரயாக்ராஜ் நகருக்கு சென்ற அவர் கூறுகையில்,’ பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பம் உண்மையிலேயே ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறியது. மேலும் இந்த பெருமை பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமைக்கு உரித்தானது. அவரது தொலைநோக்கு இந்த மாபெரும் நிகழ்வை வெற்றிகரமாக செயல்படுத்த எங்களுக்கு உதவியது, மேலும் அதன் முக்கியத்துவத்தை நாட்டிற்கும் உலகிற்கும் தெரிவிப்பதில் நீங்கள் (ஊடகங்கள்) முக்கிய பங்கு வகித்துள்ளீர்கள்.
அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். ஆன்மீக சுற்றுலா மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. உத்தரப்பிரதேசம் அதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான மாநிலம். 2024 ஆம் ஆண்டில் மட்டும், 64 கோடி யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உத்தரபிரதேசம் முழுவதும் அயோத்தி, வாரணாசி, மதுரா, பிரயாக்ராஜ், சித்ரகூட், விந்தியாச்சல், கோரக்பூர், நைமிஷாரண்யா உட்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றுள்ளனர். ஆனால் கடந்த 45 நாட்களில் மட்டும் 66.3 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்தனர். இது மத சுற்றுலாவில் புதிய சாதனைகளை படைத்துள்ளது’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
* மகாகும்பமேளாவில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் தெருவோர வியாபாரிகளும் குவிந்து இருந்தனர். அனைத்து இடங்களிலும் வியாபாரம் களை கட்டியது.
* பக்தர்கள் வருகைக்காக 10 ஆயிரம் ஏக்கரில் வசதி செய்யப்பட்டு இருந்தது.
* 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
* 2750 கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றினார்கள்.
* 74 நாடுகளின் தூதர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் மகாகும்பமேளாவில் பங்கேற்றனர்.
* 12 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
* 5 ஆன்மீக சுற்றுலா வழித்தடங்கள்
உபி முதல்வர் யோகி கூறுகையில்,’ மகாகும்பமேளா மூலம் உத்தரபிரதேசத்தில் ஐந்து முக்கிய ஆன்மீக சுற்றுலா வழித்தடங்களை உருவாக்க திட்டம் பிறந்துள்ளது. முதல் சுற்றுலா பாதை வாரணாசி மற்றும் மிர்சாபூரை பிரயாக்ராஜ் வழியாக அயோத்தி மற்றும் கோரக்பூருடன் இணைக்கிறது. இரண்டாவது பிரயாக்ராஜை, லாலாபூர் மற்றும் சித்ரகூடத்துடன் இணைக்கிறது.
மூன்றாவது பிரயாக்ராஜிலிருந்து லக்னோ மற்றும் நைமிஷாரண்யா வரை இணைக்கிறது. நான்காவது பிரயாக்ராஜை ஆக்ராவிலிருந்து புந்தேல்கண்ட் விரைவுச்சாலை வழியாக இணைக்கிறது கடைசியாக பிரயாக்ராஜில் இருந்து மதுரா, பிருந்தாவன் மற்றும் சுக்தீர்த் வரை இணைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஐந்து புதிய ஆன்மீக வழித்தடங்கள் வழியாக கடந்த 45 நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் பயணித்துள்ளனர்.
* ஒட்டுமொத்த செலவு ரூ.7500 கோடி
மகாகும்பமேளாவில் நிரந்தர மற்றும் தற்காலிக உள்கட்டமைப்புக்காக தோராயமாக 7,500 கோடி ரூபாய் செலவிட்டதாக முதல்வர் யோகி கூறினார். இதில் 200 சாலைகள், 14 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் பிரயாக்ராஜில் கட்டப்பட்டுள்ளன. கும்பமேளா பகுதி ஏஐ தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்பட்டது. 30,000 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு இருந்தன.
* 17,152 ரயில்கள் இயக்கம்
பிரயாக்ராஜ் நகரில் பணியாற்றிய ரயில்வே ஊழியர்களை பாராட்ட ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று அங்கு சென்றார். அவர் கூறுகையில்,’2019ல் நடந்த மகாகும்பமேளாவிற்கு 4 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டன. அதை விட இந்த முறை 3 மடங்கு கூடுதல் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டன. 4.5 கோடி முதல் 5 கோடி பயணிகளுக்கு 17 ஆயிரத்து 152 ரயில்கள் கூடுதலாக இயக்கி பிரயாக்ராஜ் நகருக்கு அழைத்து வந்து, அவர்களது சொந்த ஊருக்கு அழைத்து சென்று விடப்பட்டது. இதில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டன. இந்த வழியில் நாம் இணைந்து பணியாற்றினால் நம்மை ஒருவரும் தோற்கடிக்க முடியாது’ என்றார்.
* 75 ஆயிரம் போலீசாருக்கு ரூ.10,000, சிறப்பு பதக்கம் 7 நாள் விடுமுறை
மகாகும்பமேளாவில் பணியாற்றிய 75,000 காவலர்களுக்கு ரூ.10,000 போனஸ் மற்றும் ‘மகா கும்ப சேவா பதக்கம்’, மற்றும் 7 நாள் விடுமுறை வழங்குவதாக உபி முதல்வர் யோகி அறிவித்தார்.
The post 45 நாட்களில் மிகப்பெரிய சாதனை 66 கோடி பேர் சங்கமித்த மகாகும்பமேளா appeared first on Dinakaran.