புதுடெல்லி: நாடு முழுவதும் 65 லட்சம் கிராம மக்களுக்கு சட்டப்பூர்வ ஆவணமாக சொத்து அட்டைகளை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழங்கினார். சட்டீஸ்கர், குஜராத், இமாச்சல், மபி, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உபி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 65 லட்சம் பயனாளிகளுக்கு ஸ்வாமித்வா சொத்து அட்டை வழங்கும் விழா நேற்று நடந்தது.
பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சொத்து அட்டைகளை வழங்கி பயனாளிகளிடம் உரையாற்றியதாவது: இன்று 65 லட்சம் பேருக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, 2.24 கோடி பயனாளிகள் இந்த சொத்து அட்டைகளை பெறுவார்கள். உலகம் முழுவதும் சொத்துரிமை என்பது பெரிய சவாலாக உள்ளது. ஐநா நடத்திய ஆய்வில், பல நாடுகளில் சொத்துரிமைக்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் மக்களிடம் இல்லை என தெரியவந்துள்ளது.
இந்தியாவும் இந்த சவாலால் பாதிக்கப்பட்டது. கிராமங்களில் உள்ள மக்களிடம் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தும் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் சொத்துகள் பறிக்கப்பட்டன.
வங்கிகள் அவர்களின் சொத்துகளுக்கு கடன் வழங்க முன்வரவில்லை. முந்தைய அரசுகள் இதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது சொத்து அட்டைகள் மூலம் சட்டப்பூர்வ சொத்துரிமை பெற்ற பிறகு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொத்தின் மீது வங்கியில் கடன் வாங்க முடியும். அந்த பணத்தை தொழிலில் முதலீடு செய்து வாழ்வாதாரத்தை வளப்படுத்த முடியும். இத்திட்டத்தில் பயன் பெறும் பலரும் விவசாயிகள். எனவே அவர்களுக்கு சொத்து அட்டை நிதி பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும். சொத்து அட்டை, பூ ஆதார் போன்றவை கிராமங்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக மாறும் திட்டங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
* சாமானியர்களுக்கு அதிகாரமளிக்கும்
அகமதாபாத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சொத்து அட்டை வழங்கும் விழாவில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா பேசுகையில், ‘‘இன்று மட்டும் 1.53 லட்சம் விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், சாமானிய மக்களுக்கு அதிகாரமளித்தலுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. எப்போதும் மக்கள் நலனே முன்னுரிமையாக கருதும் மோடி அரசு, சாமானியர்களுக்கு அதிகாரமளிக்க அரசு எப்படி செயல்பட வேண்டுமென்பதை உறுதி செய்கிறது’’ என்றார்.
The post 65 லட்சம் பேருக்கு சொத்து அட்டைகள்: பிரதமர் மோடி வழங்கினார் appeared first on Dinakaran.