ஆக்சிடோசின் என்ற மருந்தைத் தனியார் துறையில் தயாரிக்கவும், சில்லறை விற்பனை மூலம் மக்களுக்கு விற்கவும் தடை விதித்திருக்கிறது மத்திய சுகாதார நலத் துறை. இந்தத் தடை மூலம் பாதகமான விஷயங்களுக்கே வாய்ப்புகள் அதிகம் எனும் குரல்கள் எழுந்திருக்கின்றன. பிரசவ காலத்தில் மகளிரின் உயிர் காக்கும் இந்த ஊசி மருந்தைத் தயாரிக்கவும், விற்கவும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது, இதற்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்றும், அதன் விளைவாக ஏராளமான மகளிர் உயிரிழக்க நேரிடும் என்றும், கள்ளச்சந்தையில் இதன் விலை பல மடங்கு உயரும் என்றும் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மனித உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் ஆக்சிடோசின் ஹார்மோனைப் போலவே சோதனைச் சாலையில் செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது. இதைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்ற கொள்கையில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. அதேசமயம் தாய்மார்களின் உயிரையும், சிசுக்களையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பும் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. பேறுகாலத்தில் இது மிகவும் அவசியப்படுவதை உலக சுகாதார நிறுவனமே அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பசுக்களுக்கு ஆக்சிடோசின் ஊசி போடுவதால் பால் சுரப்பு அதிகமானாலும் மடி வீங்கிக் கனத்துவிடும். ஆக்சிடோசின் கலந்த பாலைக் குடிப்பதில் பால் நுகர்வோர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. அதேசமயம், இந்த விளைவுகள் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்த பிறகே திட்டவட்டமாக எதையும் தெரிவிக்க முடியும். ஆக்சிடோசின் ஊசியால் பசுக்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால், இதை நிரூபிக்கும் ஆராய்ச்சிச் சான்றுகள் ஏதுமில்லை. 2014-ல் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வில், ஊசி போடுவதால் பாலில் ஆக்சிடோசினின் அளவு மாறுவதில்லை என்றே தெரியவந்துள்ளது.
ஆக்சிடோசினால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன என்று வைத்துக்கொண்டாலும் அதற்காக ஒரேயடியாகத் தடை விதிப்பது சரியில்லை. மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய் எதிர்ப்பு மருந்தாகவும் ஆக்சிடோசின் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை அதிகம் பயன்படுத்தினால் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள், மருந்தின் வீரியத்தைவிட அதிக வீரியத்தைப் பெற்றுவிடும் வாய்ப்பு அதிகம்.
மேலும், அரசுத் துறை நிறுவனம் மட்டுமே ஆக்சிடோசினைத் தயாரித்தால் பற்றாக்குறை ஏற்படும், விலையும் அதிகரித்துவிடும். இந்த மருந்தைத் தயாரிக்கும் கர்நாடக அரசு நிறுவனம் விலையை அதிகபட்சம் 1 மில்லி லிட்டருக்கு ரூ.16.56 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது. தற்போது சில தனியார் மருந்து உற்பத்தியாளர்கள் இதை 1 மில்லி லிட்டர் ரூ.4 என்ற விலையில் விற்றுவருகின்றனர்.
இந்நிலையில், ஒரே நிறுவனத்திடம் ஏகபோகமாக இதன் உற்பத்தி விடப்பட்டால், விலையேற்றம் தவிர்க்க முடியாததாகிவிடும். இதனால் கால்நடைகளின் உயிர்கள் காப்பாற்றப்படலாம். ஆனால், ஏராளமான பெண்களின் உயிரிழப்பு அதிகமாகிவிடும். எனவே, இந்தத் தடையை மறுபரிசீலனை செய்ய அரசு முன்வர வேண்டும்!