சென்னை: ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழிவு இருந்தது. இதில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், இந்த மாவட்டங்களில் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த மழை வெள்ளத்தால், மாவட்டங்களில் உள்ள முக்கிய ஆறுகள், ஏரிகள் உள்ளிட்டவை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளம் இன்னும் கூடுதலாக ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டமும், கடலூர் மாவட்டமும் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளது. ஆற்று வெள்ளத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. திருவண்ணாமலையில், மழையின் காரணமாக தீபமலையில் மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு நிலச்சரிவில் ஏழு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மறுபக்கம், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மழைவிட்டு மூன்று நாட்களில் பாதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 2000 கோடி நிவாரணம் வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.11 இலட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
The post ஃபெஞ்சல் புயலால் 14 மாவட்டங்கள் பாதிப்பு; ரூ. 2000 கோடி இழப்பீடு வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.