புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி தாக்குதலை நடத்தியது. இது குறித்து டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுகாதார துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்பி டி.ஆர் பாலு, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதீப், என்சிபி(எஸ்பி) சுப்ரியா சூலே, சிவசேனா(யூபிடி) சஞ்சய் ராவத், சமாஜ்வாதி எம்பி ராம்கோபால் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், ஏஐஎம்ஐஎம்மின் அசாதுதீன் ஓவைசி, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் சிண்டே, என்சிபியன் பிரபுல் படேல், எல்ஜேபி(ஆர்வி) சிராக் பஸ்வான் மற்றும் பிஜூ ஜனதா தளத்தின் சஸ்மித் பத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘நாங்கள் அரசாங்கத்தை அமைப்பதற்காக மட்டுமல்ல தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் தான் அரசியல் செய்கிறோம். இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கையாகும். அதனால் இந்திய ஆயுதப்படைகளால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் தொழில்நுட்ப விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆயுதப்படை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததற்கு இதுவே காரணமாகும். ஏனெனில் அவர்கள் ஆபரேஷன் நடவடிக்கையில் தீவிரமாக இருக்கிறார்கள். இந்திய ராணுவத்தின் சிந்தூர் நடவடிக்கையில் சுமார் 100 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா பதிலடி கொடுக்கும்’’ என்றார்.
ஆபரேஷன் சிந்தூரின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் ஆயுத படையை பாராட்டினார்கள். மேலும் அனைத்து தலைவர்களும் அரசிற்கும், ஆயுத படைகளுக்கும் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக கூட்டத்தில் தெரிவித்தனர். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நெருக்கடியான நேரத்தில் நாங்கள் அரசுடன் இருக்கிறோம் என்றார். இதேபோல் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஆபரேஷன் சிந்தூரை நடத்தியதற்காக ஆயுதபடைகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
The post ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் appeared first on Dinakaran.