திருமலை: அரசு ஊழியர்கள் 6 குழந்தைகளை பெற்றுக்ெகாண்டாலும் அவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு, இளம் இந்தியாவை இலக்காக கொண்டு, மக்கள் தொகை மேலாண்மை குறித்து கடந்த சில மாதங்களாக பிரசாரம் செய்துவருகிறார். அதற்கேற்ப சமீபத்தில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்ற தேர்தல் விதியை அவர் நீக்கி மாற்றம் செய்தார்.
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்க்கபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு கலந்துகொண்டு பேசியதாவது:
உலக நாடுகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல நாடுகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால் அந்த நாடுகள் வருங்காலத்தில் இளைஞர்கள் இல்லாத நாடாக மாறும். எனவே மக்கள் சதவீத மேலாண்மை கட்டாயம் இருக்கவேண்டும். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறைக்கென 6 மாத விடுமுறை உள்ளது. அதுகூட 2 குழந்தைகளுக்குள் இருந்தால் மட்டுமே தரப்படுகிறது. ஆனால் இதனை இப்போது மாற்றி அறிவிக்கிறேன்.
இனி, அரசு ஊழியர்கள் 3 அல்ல, 4 அல்ல, 6 குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும் மகப்பேறு விடுமுறை 6 மாதம் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு கூடுதல் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும். மகளிர் சக்தி என்பது யாருக்கும் கிடைக்காத வரம். குழந்தை பிறப்பு மகளிர் இல்லாவிட்டால் சாத்தியமில்லை. பெண்கள்தான் உலகை ஆளும் சக்தி. எனவே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று வருங்காலத்தில் கவுரவத்துடன் வாழவேண்டும். அத்துடன் மக்கள்தொகை நிர்வாக சக்தியும் நாட்டிற்கு வேண்டும். இவ்வாறு பேசினார்.
The post ‘குழந்தை பிறப்பு மகளிர் இல்லாவிட்டால் சாத்தியமில்லை’ அரசு ஊழியர்கள் 6 குழந்தைகளை பெற்றாலும் மகப்பேறு விடுமுறை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு appeared first on Dinakaran.