டெல்லி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (பிப்.21) முடிவடைகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக இத்தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் 979 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. முதல்நிலை தேர்வு மே 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஜனவரி 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் https://upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிப்.22 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
The post சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (பிப்.21) வரை அவகாசம்..!! appeared first on Dinakaran.