திருமலை: தொகுதி மறுசீரமைப்பு திட்டம் என்பது பாஜகவின் சூழ்ச்சி என்றும் ஒன்றிய அரசின் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் சந்திரபாபு நாயுடு மவுனமாக இருக்கிறார் என்று ஆந்திர காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தனது `எக்ஸ்’ தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மக்களவை தொகுதி மறுசீரமைப்பு திட்டம் என்பதும் ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சி. தென்மாநிலங்கள் மீதான பழி வாங்கும் செயல். தென்மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாததால் குறுக்கு வழியில் நாடாளுமன்றத்தில் தென்னக பிரதிநிதித்துவத்தை குறைக்க இதுபோன்ற சதி திட்டம் போடப்பட்டுள்ளது. மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தென்மாநிலங்களுக்கு இதுபோன்ற ஒன்றிய அரசின் திட்டம் பெரும் அநீதி. கடந்த 1971ம் ஆண்டுக்கு பிறகு தென்மாநிலங்களை காட்டிலும் வடமாநிலங்கள்தான் மக்கள் தொகையில் வளர்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் 8 கோடி முதல் 24 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அங்கு 80 முதல் 140 தொகுதிகளாக அதிகரிக்கும். அதேபோல் பீகாரில் 49ல் இருந்து 70 தொகுதிகளாக அதிகரிக்கும். இதன்மூலம் இந்த இருமாநிலங்களின் மட்டுமே 222 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருப்பார்கள். அதேவேளையில் ஆந்திரா, தெலங்கானாவில் கூடுதலாக 12 இடங்கள் மட்டுமே கிடைக்கும். மறுசீரமைப்பு தொடர்பாக ஒருதலைபட்சமாக முடிவு எடுக்காமல் அனைத்து கட்சியினருடன் பாஜக ஆலோசிக்கவேண்டும். இந்த விவகாரத்தில் தென்மாநிலங்களில் உள்ள அனைத்து கட்சியினரும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு பதிலளிக்காமல் மவுனம் காத்து வருகிறார். பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் இந்த விவகாரத்தில் மவுனமாக இருப்பது தெரிகிறது. ஆனால் இது அர்த்தமற்ற செயல்.
எனவே சந்திரபாபு தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The post தொகுதி மறுசீரமைப்பு திட்டம் பாஜகவின் சூழ்ச்சி; ஆந்திர காங். தலைவர் ஷர்மிளா விமர்சனம் appeared first on Dinakaran.