புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போருக்கு தயாராகி வரும் பதற்றமான சூழலில், நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்கு பிறகு நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எதிரிநாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள், குதிரை ஓட்டுபவர் ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், லடாக், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வான்வழி தாக்குதல் எச்சரிக்கை ஒலியை ஒலிக்கவிட்டு சோதனை நடத்தப்படும். போர் பதற்ற சூழலில் அவசரகால வெளியேற்ற ஒத்திகை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிரிகள் தாக்கும்போது பாதுகாப்பாக இருப்பது எப்படி என மக்கள், மாணவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். இந்தியா – பாக். எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பிடிக்கப்படவில்லை. ஆனாலும் அவர்கள் பாகிஸ்தானில் இருந்து எல்லைதாண்டி நுழைந்தவர்கள் என்றும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் இந்திய புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. இதனால், தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இறக்குமதிக்கு முழு தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. சிந்து நதி நீரை தடுத்தால் அது போராக கருதப்படும் என கூறியிருக்கும் பாகிஸ்தான் அத்தகைய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டால், சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக எச்சரித்துள்ளது.
இதனால் இரு நாடுகள் இடையே போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது. இதில், பாகிஸ்தானுக்கு எத்தகைய பதிலடி தருவது என்பது குறித்து தீர்மானிக்க ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, முப்படைகளும் கடந்த சில நாட்களாக போர் ஒத்திகையில் ஈடுபட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதியும், விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி.சிங்கும் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது கடற்படை மற்றும் விமானப்படைகளின் போர் பயிற்சி குறித்தும் தயார் நிலை குறித்தும் அவர்கள் பிரதமர் மோடியிடம் விளக்கினர்.
இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளாக நேற்று பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் நமது ராணுவம் பாகிஸ்தானுக்கு எந்த வகையான பதிலடி தருவது என்பது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதல் நடந்து இதுவரை 12 நாட்களான நிலையில், கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து பாதுகாப்பு தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் 12வது நாளாக இன்று அத்துமீறி எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி, மெந்தார், நவ்ஷேராவில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் துப்பாக்கிச்சூட்டிற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
* தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் போர்க்கால ஒத்திகை
தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்துவது என்று தலைமைச் செயலர் காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார். கல்பாக்கம், சென்னை விமான நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த திட்டம்.
* இந்தியாவுக்கு முழு ஆதரவு: ரஷ்ய அதிபர் புடின் உறுதி
போர் பதற்றத்திற்கு மத்தியில், பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிபர் புடின், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். இந்த கொடூர தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என குறிப்பிட்ட அதிபர் புடின், தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய புடின், அதற்கான அனைத்து உதவிகளும் இந்தியாவுக்கு செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் அனைத்து செயல்களுக்கும் முழுமையான ஆதரவு தருவதாகவும் அதிபர் புடின் கூறியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக எந்த சமரசமற்ற பதிலடி தர வேண்டுமென இரு தலைவர்களும் கூறி உள்ளனர். மேலும், வருடாந்திர இருதரப்பு உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதை அதிபர் புடின் ஏற்றுக் கொண்டதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா நிற்கும் நிலையில், இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஜப்பானும் ஆதரவு
இந்தியா வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நகாதனியை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் நாச வேலைகள் செய்ய எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்தார். பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஜப்பான் பாதுகாப்பு அமைச்சம் நகாதனி இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தார்.
The post நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்கு பிறகு நாளை போர்க்கால ஒத்திகை: மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.