புதுடெல்லி: இந்தியா பிரிவினையின் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கருத்து ெதரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டியில், ‘பஹல்காமில் நடந்த தீவிரவாத சம்பவத்தின் பின்னணியை பார்க்கும் போது, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் தீர்க்கப்படாத கேள்விகளை பிரதிபலிக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவின் பிரிவினையானது தேசியவாதத்தின் வெவ்வேறு கோணங்களின் அடிப்படையில் நிகழ்ந்தது. இன்றும் கூட அதன் விளைவுகளை அனுபவித்து வருகிறோம். பஹல்காமின் சோகம் அதே பிரிவினையின் தீர்க்கப்படாத கேள்விகளின் நிழல் போன்று உள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது. தீவிரவாதத்திற்கு எதிராக நாடே ஒற்றுமை பலத்தை காட்டும்போது, தற்போது பிரிவினை பற்றிப் பேசுவது ஏற்கனவே ஆன காயங்களில் உப்பு தேய்ப்பது போல் இல்லையா? அன்றைய காலத்தில் பிரிவினையைத் தடுக்க பலர் தங்களால் இயன்றதைச் செய்தனர்; ஆனால் ஆழமான கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிவினையை தவிர்க்க முடியவில்லை. இந்தியா பிரிவினையின் விளைவுகளை இன்றும் நாம் அனுபவித்து வருகிறோம்.
இதை இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வியும் எழுகிறது. அந்த நேரத்தில் இந்தியாவின் முன் இருந்த கேள்வி என்னவென்றால், சுமார் 10 கோடி முஸ்லிம்களை என்ன செய்வது என்பதுதான்; இன்றும் அவர்களை தொந்தரவு செய்யும் உண்மையான கேள்வி இதுதான்: கிட்டத்தட்ட 20 கோடி முஸ்லிம்களை இப்போது என்ன செய்வது? பாகிஸ்தானின் தலைவரான ஜின்னாவின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமா?, முஸ்லிம்களுக்கு தனி நாடு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும்’ என்றார்.
The post பஹல்காம் தாக்குதல் எதிரொலி; இந்தியா பிரிவினையின் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறோம்: காங். மூத்த தலைவர் கருத்து appeared first on Dinakaran.