புதுடெல்லி: போப் பிரான்சிஸ் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று வாடிகனில் காலமானார்.
இதுகுறித்த அறிவிப்பை, போப் வாழ்ந்து வந்த ரோமின் வாடிகன் சிட்டியில் உள்ள டோமஸ் சான்டா மார்டா தேவாலயத்திலிருந்து அவரின் நிதிச் செயலரான கார்டினல் கெவின் பெர்ரெல் அறிவித்தார். போப் பிரான்சிஸ் மறைவு உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜென்டினாவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி 266வது போப்பாக தேர்வு செய்யப்பட்டார். சமூக நீதி கொள்கைகளில் உறுதியாக இருந்த போப் பிரான்சிஸ், போர் இல்லாத அமைதியான உலகுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
உலகில் அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். திருமண முறிவு, கருக்கலைப்பு, கருத்தடைக்கான உரிமை உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். கருணைக் கொலை செய்வதைக் கடுமையாக எதிர்த்த போப் பிரான்சிஸ், திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்களை உள்ளடக்கிய ‘எல்ஜிபிஇடி’ அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளாகக் கொண்டாடப்படும் ‘ஈஸ்டா்’ தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, புனித பீட்டா்ஸ் சதுக்கத்தில் தோன்றிய போப் பிரான்சிஸ், அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு கடைசியாக வாழ்த்து தெரிவித்தார். மறைந்த போப் பிரான்சிஸின் உடல் வாடிகன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், உயிரிழந்த நான்கு முதல் ஆறு நாள்களுக்குள் போப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும். பின்னர், 9 நாள்கள் அரசு துக்கத்துக்கு பிறகு புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடத்தப்படும். போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் போப் பிரான்சிஸின் மறைவை மதித்து, ஒன்றிய அரசு மூன்று நாள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘மறைந்த போப் பிரான்சிசுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியாவில் மூன்று நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும். அதன்படி இன்றும் (ஏப். 22), நாளையும் (ஏப். 23) நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும் போப் அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளிலும் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளதால், இந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். இந்த நாட்களில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது. இந்தியாவின் மூன்று நாள் தேசிய துக்க அனுசரிப்பானது, போப் பிரான்சின் உலகளாவிய தாக்கத்தையும், இந்திய மக்கள் மீதான அவரது அன்பையும் பிரதிபலிக்கிறது. அவரது இறுதிச் சடங்கு மற்றும் அதைத் தொடர்ந்து வத்திக்கானில் புதிய போப் தேர்வு ஆகியவை உலகின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.