மும்பை: மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் கூடுதலாக 76 லட்சம் வாக்குகள் எங்கிருந்து வந்தது? என்று ஒன்றிய நிதியமைச்சரின் கணவர் வெளியிட்ட புள்ளி விபரத்தின் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் மகாயுதி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இன்னும் புதிய அரசு பதவியேற்காத நிலையில், தேர்தலின் போது நடந்த வாக்கு எண்ணிக்கையில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. வாக்குப்பதிவு முடிந்த நேரத்திற்குப் பிறகும், கூடுதலாக 8% வாக்குப்பதிவு நடைபெற்றதாக புள்ளி விபரங்கள் கூறுவதால், கூடுதலாக 76 லட்சம் வாக்குகள் எப்படி கிடைத்தன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரபல பொருளாதார நிபுணரும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர், மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை புள்ளிவிவரங்களில் உள்ள முரண்பாடுகளை அம்பலமாகி உள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிவுற்றவுடன் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவீதத்திற்கும், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு வெளியிட்ட வாக்கு சதவீத எண்ணிக்கைக்கும் எட்டு சதவீதம் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவு நடந்த நாளில் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு 58.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே நாளில் முற்பகல் 11.30 மணிக்கு 65.02 சதவீதமாக வாக்குப்பதிவு இருந்தது. அன்றைய தினம் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் 66.05 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 5,64,88,024 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப்பெற்று இருந்தனர். ஆனால் இரவு 11.30 மணியளவில் வெளியிட்ட புள்ளிவிபரப்படி வாக்குப்பதிவு 65.02 சதவீதமாக உயர்ந்தது; இதன்படி மொத்தம் 6,30,85,732 பேர் வாக்களித்ததாக கருதப்படும்.
இதன் மூலம், மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை மொத்த வாக்களித்தவர் எண்ணிக்கை வித்தியாசம் 65,97,708 ஆக உள்ளது. கிட்டத்தட்ட 66 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த புள்ளி விபரங்கள் இத்துடன் நிறுத்தப்படவில்லை. வாக்கு எண்ணிக்கைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியிட்ட தகவலில் 9,99,359 வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன. இது சுமார் 10 லட்சம் வாக்குகள் ஆகும். வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய 12 மணி நேரத்தில் மொத்த வாக்குகளின் வித்தியாச அதிகரிப்பு 75,97,067 ஆக இருந்தது. கிட்டத்தட்ட 76 லட்சம் வாக்குகள் அதிகமாக காட்டப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய வரலாற்றில், தற்காலிக மற்றும் இறுதி புள்ளிவிவரங்களுக்கு இடையிலான வேறுபாடு ஒருபோதும் ஒரு சதவீதத்தைத் தாண்டவில்லை. வித்தியாசம் எப்போதும் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும்.
மகாராஷ்டிராவில், தற்காலிக மற்றும் இறுதி புள்ளிவிவரங்களுக்கு இடையிலான வித்தியாசம் 7.83 சதவீதமாக இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து மணிக்குப் பிறகு மேலும் 76 லட்சம் வாக்குகள் கூடுதலாக காட்டப்பட்டுள்ளன. சராசரியாக, ஒரு வாக்குச்சாவடியில் 1,000 முதல் 1,200 வாக்குகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, தகுதி வாய்ந்த வாக்காளர்களில் 58.22 சதவீதம் பேர் வாக்களித்தனர். ஐந்து மணிக்கு வாக்குச்சாவடி வாயில் மூடப்பட்ட பின்னர் வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கையில் பெரும் முரண்பாடு உள்ளது. எனவே முழு தேர்தல் செயல்முறையும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். விவிபேட் வாக்கு சீட்டுகள் எண்ணப்பட வேண்டும். எனினும், மகாராஷ்டிரா வாக்கு எண்ணிக்கை சதவீத வித்தியாசம் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஆணையம் எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை. மக்களவை தேர்தலின் போது இதேபோன்று முரண்பாடுகள் இருந்ததாக கூறப்பட்டது. அதற்கும் எந்த பதிலும் இல்லை. மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவு நடைபெற்ற போது தான், ஜார்கண்டிலும் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. ஜார்கண்டில் வாக்குப்பதிவு நடந்த நாளின் போது மாலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலான வாக்கு சதவீத வித்தியாசம் 1.79 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால் மகாராஷ்டிராவில் மட்டும் எப்படி 8 சதவீதம் வரை வாக்கு வித்தியாசம் இருக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
The post மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலின்போது வாக்குப்பதிவில் கூடுதலாக 76 லட்சம் வாக்குகள் எங்கிருந்து வந்தது?.. ஒன்றிய நிதியமைச்சரின் கணவர் வெளியிட்ட புள்ளி விபரத்தில் பகீர் தகவல் appeared first on Dinakaran.