வைட்டமின் சி அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் மாரடைப்பைத் தடுப்பதோடு, இள வயது மரணங்களையும் தடுப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
டென்மார்க்கைச் சேர்ந்த 1 லட்சம் பேரின் உணவுப்பழக்க வழக்கங்களில் பழம் மற்றும் காய்கறியின் பங்கு, அவர்களின் டி.என்.ஏ. ஆகியவற்றை ஆய்வாளர்கள் பரிசோதனைக்குட் படுத்தினர்.
இந்த ஆய்வை நடத்திய டென்மார்க் நாட்டின் ஹெர்லெவ்-ஜெண்டாப்ட் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி கேமிலா கொபைலெக்கி என்பவர் கூறும்போது, “வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் எடுத்து கொள்ளும் போது மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் 15% குறைவதையும், இளம் வயது மரணங்கள் 20% தடுக்கப்படுவதையும் நாங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்” என்றார்.
வைட்டமின் சி ஒரு சிறந்த பிராண வாயு ஏற்றத் தடுப்பானாக செயல்படுவதோடு, தொடர்புறுத்தும் திசுவையும் உருவாக்குகிறது. இதனால் உயிரியல் மூலக்கூறுகள் மற்றும் செல்கள் சேதமடைவது தடுக்கப்படுகிறது. செல்களும், உயிரியல் மூலக்கூறுகளும் சேதமடைவதுதான் இருதய நோய் உட்பட பல நோய்களுக்குக் காரணமாக விளங்குகிறது.
மனித உடல் இயற்கையாக வைட்டமின் சி-யை உற்பத்தி செய்வதில்லை, ஆகவேதான் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுப்பொருட்களை நாம் நம் உணவுப்பழக்க வழக்கத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மஞ்சள் குடைமிளகாய், கொய்யாப்பழம், கரும்பச்சை காய்கறிகள், ஸ்ட்ராபெரிகள், ஆரஞ்சுப் பழம், சமைக்கப்பட்ட தக்காளி, பப்பாளி, பைனாப்பிள் உள்ளிட்டவைகளில் வைட்டமின் சி சத்து உள்ளது. வெங்காயம், உருளை, பசலைக்கீரை, எலுமிச்சை ஆகியவற்றிலும் ஓரளவுக்கு வைட்டமின் சி சத்தைக் காண முடிகிறது.
இந்த ஆய்வு அமெரிக்க இதழானா கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்டுள்ளது.


