டெல்லி: முல்லை பெரியாறு அணைக்கான புதிய கண்காணிப்புக் குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேப்போன்று இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இத்தகைய சூழலில், கேரள மாநிலத்தை சேர்ந்த மேத்யூ நெடும்பாரா என்பவர் உட்பட மொத்தம் ஐந்து வழக்கறிஞர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அதில்,” வயநாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட பேரிடரை கருத்தில் கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மெற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு ரீதியாக ஆய்வு எப்போது கடைசியாக மேற்கொள்ளப்பட்டது.
அணை பலமாக உள்ளதா என்பது தொடர்பாக ஒன்றிய அரசின் நிபுணர் குழுவிடம் கருத்தை கேட்டு, அணையை கட்டமைப்பு ரீதியாக ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்க இந்த விவகாரத்தில் அறிவுறுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை ஏதேனும் உள்ளதா என்பதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம். அதேப்போன்று இதற்கு முன்னதாக அணையை ஆய்வு செய்த நிபுணர் குழுவில் இடம் பெற்ற நபர்களின் தன்மையையும் அறிய வேண்டியுள்ளது. என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து பிற்பபிக்கப்பட்ட உத்தரவில் அணை பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ள படி, அணை பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை கொண்டு தேசிய குழு அமைக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த குழு ஒன்றிய அரசால் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது. அதில், அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தேசிய அளவிலான நிபுணர் குழு ஏன் அமைக்கப்படவில்லை என்பதற்கான விரிவான விளக்கம் இருக்க வேண்டும். அதேப்போன்று தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமும் நிபுணர்கள் குழு விவகாரம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும்.
குறிப்பாக இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து முல்லை பெரியாறு அணைக்கான புதிய கண்காணிப்புக் குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை குழு கண்காணிக்கும் என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் இடம்பெற்றுள்ளனர். கேரள நீர்ப்பாசனத்துறை தலைவர், பெங்களூரு ஐஐஎஸ் கல்வி நிறுவன பிரதிநிதி உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர். புதிய கண்காணிப்புக் குழு தொடர்பான அறிக்கையை ஒன்றிய நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த முல்லை பெரியாறு கண்காணிப்புக் குழு கலைக்கப்படுவதாகவும் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்தது.
The post முல்லை பெரியாறு அணைக்கான புதிய கண்காணிப்புக்குழுவை அமைத்தது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.