ஆரோக்கியம், மருத்துவம்

அதிகரிக்கும் குழந்தையின்மை…

இருபது வருடங்களுக்கு முன்பு வரை ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லையெனில் பெண்ணையே குறைஉள்ளவராய் சொல்வர். ஆனால், இப்பொழுது வளர்ச்சி அடைந்த தொழில்நுட்ப வசதிகளால் இருவரில் யாருக்கு பிரச்னை என எளிதாய் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில் கடந்த பதினைந்து வருடங்களில் அதிகமாகி வரும் குழந்தையின்மை ஏன் வருகிறது, தாய்மை அடைய என்னென்ன உடலியல் மாற்றங்கள் நடக்கிறது, இதில் எங்கு சிக்கல் உருவாகிறது, இவற்றில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

கருத்தரிப்பு…

கருமுட்டை விந்தணுவுடன் சேர்ந்தால் கருத்தரிப்பு நடக்கும். இல்லையெனில் கருமுட்டை உதிரப்போக்குடன் வெளியே வந்துவிடும். கருமுட்டை வெடித்து சினைப்பையிலிருந்து சினைப்பை குழாய்க்கு வந்து 24 மணிநேரம் உயிர்ப்புடன் இருக்கும். இங்குதான் விந்தணுவுடன் சேர்ந்து கருத்தரித்து பின் கருப்பைக்குள் சென்று பதியும். ஒரு விந்தணு உற்பத்தியாகி, வளர்ந்து, முதிர்ந்து வெளியே வருவதற்கு 75 நாட்கள் ஆகும். அதேபோல விந்தணு பெண்ணின் உடலில் 4 முதல் ஐந்து நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும்.

நம் தாயின் கருப்பையில் நாம் இருக்கும்போதே லட்சக்கணக்கான கருமுட்டைகள் உற்பத்தியாகிவிடும். மாதம்தோரும் ஒன்று அல்லது இரண்டு கருமுட்டை வளர்ந்து, முதிர்ந்து, வெடித்து சினைப்பையிலிருந்து கருப்பைக்கு வரும். ஒரு கருமுட்டை நன்கு வளர்ந்து முதிர்ச்சியடைய 90 முதல் 120 நாட்களாகும். முதிர்ந்த கருமுட்டை வெடித்து வெளியே வருவதற்கு 14 நாட்களாகிறது.

ஹார்மோன்கள்…

மாதவிடாய் சுழற்சி மொத்தம் 28 நாட்களைக் கொண்டது. சிலருக்கு 35 நாட்களைக் கொண்டது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் ஹார்மோன்களின் சுரப்பு மாறும். ஈஸ்ட்ரோஜன்(Estrogen), ப்ரோஜஸ்டிரோன்(Progesterone), லியூடினைசிங் ஹார்மோன்(Leutinizing Hormone), ஃபோலிகுலர் ஸ்டிமியூலேடிங் ஹார்மோன்(Follicular Stimulating Hormone), டெஸ்டோஸ்டிரோன்(Testosterone) என சுரப்புகளும் மாறிக்கொண்டே இருக்கும். உதிரப்போக்கு ஆரம்பித்த பதினான்காம் நாள் கருமுட்டை வெடித்து சினைப்பை குழாய்க்கு வரும். இதில் சில நாட்கள் முன்பின் இருக்கலாம். இந்த ஹார்மோன்கள்தான் கருமுட்டையின் வளர்ச்சி, எப்போது வெடித்து வெளியே வர வேண்டும், அதற்காக கருப்பையை தயாராக்குவது என எல்லாவற்றையும் செய்யும்.

இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது, சரியான அளவில், சரியான நேரத்தில் ஒரு ஹார்மோன் சுரந்த பின் அதற்கு அடுத்த ஹார்மோன் உற்பத்தி ஆக வேண்டும். எனவே இதில் ஒன்றின் சுரப்பில் மாறுதல் இருந்தாலும் மற்றவையும் பாதிக்கப்படும். மாதவிடாய் சுழற்சியும் பாதிக்கப்பட்டு கருத்தரிப்பும் பாதிக்கப்படும். ஆண்களின் விந்தணுவின் உற்பத்தி, எண்ணிக்கை, திறன் எல்லாம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனைச் சார்ந்தது.

மேலும் ஹார்மோன்கள் சுரப்பதற்கு மூளையில் உள்ள ஹைப்போதளாமஸ், பிட்யூட்டரி சுரப்பியும், இனப்பெருக்க உறுப்பு இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இயங்க வேண்டும். ஏனெனில் ஹார்மோன்கள் சுரப்பதில் மூளைக்குதான் முதல் முக்கிய பங்கு இருக்கிறது. இந்த மூன்று உறுப்புகளில் இருந்து மாறி மாறி சமிக்ஞைகள் சென்று கொண்டு இருக்கும்.

புள்ளிவிவரங்கள்…

*28 மில்லியன் மக்கள் இந்தியாவில் குழந்தையின்மையால் பாதிக்கப்படுகிறார்கள்.

*பதினைந்து இந்தியத் தம்பதியர்களில் ஒரு தம்பதி கருவுறுதலில் சிக்கலில் இருக்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

*உலக அளவில் 80 மில்லியன் தம்பதியர்கள் கருவுறுவதில் சிக்கலை எதிர்கொள்கிறார்கள்.

*உலக அளவில் ஆறில் ஒருவர் குழந்தையின்மைக்கு காரணமாக இருக்கிறார்கள்.

*இந்தியாவில் குழந்தையின்மைக்கு 40 சதவிகிதம் ஆண்களிடமும், 40 சதவிகிதம் பெண்களிடமும், 20 சதவிகிதம் வேறு காரணங்களாலும் இருக்கிறது.

காரணங்கள்…

*ஆண், பெண் இருவருக்கும் மன அழுத்தம், வேலைப் பளு, குடும்பப் பிரச்னைகள், அவசர வாழ்க்கை மற்றும் குழந்தை இல்லையென்பது என அமைதி இழந்த சூழலில் சிக்கிக் கொள்வது.

*மது மற்றும் புகைப் பழக்கம். ஒரே அளவில் இவை இரண்டையும் எடுத்துக்கொண்டாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் உடலில் பாதிப்பு அதிகம் என ஆராய்ச்சி கூறுகிறது.

*அதிக வெப்பம் நிறைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதும், இறுக்கமான உள்ளாடைகள் அணிவதும் ஆண்களுக்கு குழந்தையின்மையின் காரணமாய் அமைகிறது.

*பி.சி.ஓ.டி, அதீத உடற்பருமன், அதிக ரத்த சர்க்கரை அளவு, அதிக இன்சுலின் உற்பத்தி போன்ற பாதிப்புகளும் பெண்களின் சீரற்ற கருமுட்டை வளர்ச்சிக்குக் காரணம்.

*சர்க்கரை நோய், சர்க்கரை நோயிற்கு முந்தைய நிலையான ‘Pre Diabetes’ எனும் நிலை, தைராய்டு பிரச்னைகள், அதிக உடற்பருமன் என அனைத்தும் ஆண்களுக்கும் காரணமாய்
அமைகிறது.

*தைராய்டு ஹார்மோன்களின் அளவில் மாற்றம் இருந்தால் அது மாதவிடாய் சுழற்சியின் ஹார்மோன்களை நேரடியாய் பாதிக்கும்.

பக்க விளைவுகள்…

*மொத்த இனப்பெருக்க இயக்கத்துக்கும் ஹார்மோன்களே முக்கியம் என்பதால் ஆரோக்கியமற்ற விந்தணுவும், கருமுட்டையும் கருத்தரிப்பை தாமதமாக்கும். மேலும் கரு கலைவது, உருவான கருவில் மரபணு மாறுதல்கள் என சிக்கல்கள் ஏற்படும்.

*தொடர்ந்து தாமதமாகும் கருத்தரிப்பினால் மனஅழுத்தம் ஏற்படலாம். இதனால் உடல் நிலையும் பலவீனமாகும்.

ஆபத்துக் காரணிகள்…

*பெண்கள் பயன்படுத்தும் சிலவகை ஒப்பனைப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் ஹார்மோன்களின் உற்பத்தியில் இடையூறு செய்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

*அடுப்பறையில் பயன்படுத்தும் எண்ணெய், நெய் போன்ற திரவக் கொழுப்பு பொருட்களை நெகிழி (Plastic) டப்பாக்களில் ஊற்றி வைக்கும்போது, வெளியில் உள்ள வெப்பநிலைக் காரணமாக நெகிழியில் உள்ள நச்சுத்தன்மை கரைந்து எண்ணெயோடு கலக்கும் அபாயம் இருக்கிறது. எனவே நெகிழி டப்பாக்களை, பொருட்களை முடிந்த வரை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

*வீட்டை சுத்தம் செய்யும் திரவங்கள், பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் பொருட்கள், துணி துவைக்கப் பயன்படுத்தும் சோப், பொடி, திரவ ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றில் இருக்கும் சிலவகை ரசாயனப் பொருட்கள் ஹார்மோன்களின் உற்பத்தியை பாதிக்கிறது.

*பதப்படுத்தப்பட்ட உணவுகள், டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவு, செயற்கை நிறமிகள் கலந்த உணவு என செயற்கை மற்றும் குப்பை (junk foods) உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது.

*அதிக கொழுப்பு மற்றும் மாவுச் சத்து உள்ள பொருட்கள் உட்கொள்வது.

*ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒன்றை உண்டு கொண்டே இருப்பது.

*குறைவான அளவில் நீர் அருந்துவது. இதனால் அதிக அளவில் இருக்கும் ஹார்மோன்கள் உடலிலிருந்து வெளியேறாமல் பாதிப்பினை ஏற்படுத்தும்.

*எட்டு மணி நேரம் தூங்காமல் இருப்பது.

*இரவு மற்றும் பகல் நேர வேலை (day & night shift) என மாதத்தில் நான்கு வாரமும் மாற்றி மாற்றி வேலை செய்வது.

*தினசரி 20 நிமிடங்களாவது வெயில் படாமல் இருப்பது.

இயன்முறை மருத்துவம்…

வாழ்வியல் மாற்றங்களும், உணவும் 50 சதவிகிதம் நம் உடலைக் காக்கின்றது எனில், மீதம் உள்ள 50 சதவிகிதம் உடற்பயிற்சிகளே நமக்குக் கேடயமாக இருக்கிறது. உடற்பருமனை குறைக்கவும், மேலும் உடல் எடை ஏறாமல் இருக்கவும், சுறுசுறுப்புடன் மன அழுத்தம் இல்லாமல் இயல்பாய் இயங்கவும் உடற்பயிற்சி தேவைப்படுகிறது.

திருமணத்திற்கு முன் அல்லது தாய்மையை தேர்வு செய்யும் முன் தம்பதியர் இருவரும் அருகில் உள்ள இயன்முறை மருத்துவ நிலையத்தை அல்லது உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள இயன்முறை மருத்துவரையோ அணுகி, முழு உடல் தசைகள், அதன் வலிமை என எல்லாவற்றையும் பரிசோதனை செய்து கொண்டு, அவர்கள் சொல்லித்தரும் அவரவருக்குரிய உடற்பயிற்சிகளை பின்பற்ற வேண்டும்.

ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நுரையீரல், இதயம் தாங்கும் ஆற்றல் (Cardiac Endurance) அதிகமாகும். மேலும் உடல் பருமனை குறைக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். தசை வலிமை பயிற்சிகள் நம் உடலின் தசைகளுக்கு வலிமை சேர்ப்பதோடு ஆரோக்கியமாக இயங்கிடவும் செய்யும். தசை தளர்வு பயிற்சிகள் நம் தசைகள் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் பயன்படும்.

உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்வதன் மூலம் ஹார்மோன்கள் அனைத்தும் சீராய் அந்தந்த நேரத்தில் சுரக்கும். இதனால் எளிதில் கருத்தரிக்க முடிகிறது.
வாழ்வியல் மாற்றங்கள்…

*தினசரி எட்டு மணி நேர இடையூறு இல்லாத உறக்கம்.

*தினசரி குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது.

*தினசரி உடற்பயிற்சி செய்வது.

*தினசரி உணவில் காய்கறிகள், புரதச் சத்து மற்றும் நல்ல கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது.

*தினசரி செல்போன் பயன்பாட்டை குறைத்து, மற்ற எந்த பொழுது போக்கில் ஆர்வம் இருக்கிறதோ அதனை குறைந்தது 30 நிமிடங்களாவது செய்வது.

*மன அழுத்தம் தரும் எந்த ஒரு விஷயத்திலும் சிக்கிக் கொள்ளாமல், மன அழுத்தத்தைக் குறைக்க தம்பதியராய் சேர்ந்து ஒருசேர பொழுதுபோக்கில் நேரத்தை செலவிடுவது.

*வீட்டில், அலுவலக அறையில், மகிழுந்தில் உள்ள வாசனை சேர்க்க உதவும் பொருட்களில் கூட ஹார்மோன்களை பாதிக்கும் ரசாயனங்கள் இருக்கிறது என்பதால், காற்றோட்டமாய் இருக்க வெளிக் கதவுகளை திறந்து விட்டுக்கொள்வது அவசியம்.

*கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு கணினி வழி பண ரசீது தருவது இப்போது எங்கும் புழக்கத்தில் உள்ளது. எனவே அதில் உள்ள செயற்கை மை ஆபத்து என்பதால், வீட்டிற்கு வந்ததும் கைக்கழுவுதல் அவசியம். இது ஏ.டி.எம் இயந்திரத்தில் வரும் ரசீதுக்கும் பொருந்தும்.

*தினசரி 20 நிமிடம் வெயிலில் நிற்பது மிகவும் அவசியம்.மொத்தத்தில், முக்கால்வாசி குழந்தையின்மை பிரச்னைக்கு நம்மிடமே தீர்வு இருக்கிறது என்பதால், தாமதமின்றி தக்க நேரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுத்து வரும் சந்ததியினருக்கு விரைவாய் உயிர் கொடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *