மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்றிய அரசின் அமலாக்க துறையால் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மே 10ம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிப்பதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், ஜூன் 2ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்.
இதனிடையே, அமலாக்க துறை தன்னை கைது செய்தது தவறு என குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது, அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே 90 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்திருப்பதாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற காரணங்களை கருத்தில் கொண்டும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
அத்துடன், முதல்வர் பதவியில் நீடிப்பதை அவரே முடிவு செய்துகொள்ளலாம் எனவும் பச்சைக்கொடி காட்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த சாட்டையடி, அமலாக்கத்துறைக்கு மட்டுமல்ல. பழி வாங்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ள ஒன்றிய பாஜ அரசுக்கும் சேர்த்துதான். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் ஜாமீன் வழங்கியது. அவருக்கு உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்கும் என்பதும் ஒன்றிய பாஜ அரசுக்கு தெரியும். அதனால்தான், இன்னொரு சதி திட்டம் தீட்டி, ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வர இருந்த நாளில், அதற்கு ஒரு நாள் முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது.
அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்து, பல மடங்கு வேகமாக பணியாற்றுவார் என திட்டமிட்டே இந்த சூழ்ச்சியை செய்தது. ஆனால், நீதிமன்றம் தற்போது ஒன்றிய பாஜ அரசின் முகத்தில் கரி பூசிவிட்டது. அதாவது, உங்கள் ஆணவத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள், மற்ற கட்சிகளுக்கு எதிராக சதி செய்வதை நிறுத்துங்கள் என உச்சநீதிமன்றம் மறைமுகமாக சாடியுள்ளது. இதைத்தான், ‘‘உண்மை கலங்கலாம். ஆனால், தோற்காது” என டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி விளாசியுள்ளார்.
உச்சநீதிமன்றம் கெஜ்ரிவால் வழக்கில் கூறியுள்ள கருத்துக்கள், வரும் காலத்தில் அமலாக்க துறை, சிபிஐ என ஒன்றிய அரசின் விசாரணை ஏஜென்சிகள் எடுக்கும் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள். கெஜ்ரிவாலுக்கு ஒரு பக்கம் அமலாக்கதுறை வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், இன்னொரு பக்கம் சிபிஐ வழக்கில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கும் உடைபடும் நாள் வெகுதொலைவில் இல்லை. நீட் தேர்வு முறைகேடு வழக்கிலும் ஒன்றிய பாஜ அரசை, உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டிய சூழல் வரும் என வெளிப்படையாக எச்சரித்தது. இப்படி நீதிமன்றம் வாயிலாக ஒன்றிய அரசு தொடர்ந்து சாட்டையடி பெற்று வருகிறது. எனவே, இனியாவது, தனது வாலை மடக்கி, எதிர்கட்சியினரின் உணர்வுகளை புரிந்துகொண்டு, ஜனநாயக ரீதியில் செயல்டுவது நல்லது.