குஜராத் சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் மிகையுணர்ச்சி ததும்பும் ஆவேச உரையைக் கண்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள் என்பதுதான் இந்தத் தேர்தலில் மிகுந்த ஆச்சரியத்துக்குரிய விஷயம்! தேர்தல் பிரச்சாரத்தில் மக்களின் உணர்ச்சியைத் தூண்டும் வகையிலேயே மோடி பேசினார். அவர் கையாண்ட பிரதானமான உத்தி இந்து – முஸ்லிம் பிரிவினைவாதம். “காங்கிரஸின் உயர் மட்டத் தலைவர்கள் மோடியைத் தோற்கடிக்க பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி செய்கிறார்கள்” என்று பாஜக பரப்பிய பிரச்சாரம் அவற்றின் உச்சம். ஆனால், இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? மோடியின் அனல் பறக்கும் பிரச்சார உரைகள் எப்போதுமே தரக்குறைவானவையாகவே இருக்கின்றன! முஸ்லிம்களை வெளியாட்களாகக் காட்டுவதுதான் பாஜகவின் முக்கிய நோக்கம் என்பதையே காட்டுகின்றன!
சரி, பாஜகவைத் தோற்கடிப்பதற்காக பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்டு காங்கிரஸ் தலைவர்கள் நிஜமாகவே சதி செய்கிறார்களா? இதற்கான பதில்: உண்மை என்பது இங்கே ஒரு பொருட்டே அல்ல!
இன்றைய நவீன காலத்தில் பிரகாசமாகிக்கொண்டிருக்கிற ‘உண்மைகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல’ எனும் உண்மையைப் புரிந்துகொள்ள 1922-ல் வெளியான ஒரு புத்தகத்தைப் பற்றி நாம் பேசுவோம்.
அமெரிக்கப் பத்திரிகையாளர் வால்டர் லிப்மேன் 1922-ல் எழுதிய புத்தகம் ‘பப்ளிக் ஒபீனியன்’. இதில் அவர் சொல்கிறார்: “ உலகம் தொடர்பாக நாம் அனைவரும் அவரவர் மனதில் ஒரு சித்திரத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது மனதில் இருக்கும் உலகமானது நிஜ உலகத்தை ஒத்திருக்கும் ஒன்றுதான். அதன் அசலான சித்திரம் அல்ல!”
அதாவது, “நமது பார்வையின் அடிப்படையில் ஒரு உலகத்தை நமது சிந்தனையில் உருவாக்கிக்கொள்கிறோம்; அதையே உரமிட்டு வளர்க்கிறோம். அதை மாற்றிக்கொள்வது என்றால் மிக அதிகமான முயற்சி தேவைப்படும். நாம் உருவாக்கியிருக்கும் பார்வை யில் உண்மைகள் குறுக்கிட்டால், அந்த உண்மைகளைப் புறக்கணித்துவிடுகிறோம். நமது உலகப் பார்வைக்கு இணக்கமான விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறோம்; ஜனநாயகத்துக்கு இது ஒரு சவால்” என்கிறார் லிப்மேன்.
நீங்கள் படிக்க வேண்டிய இன்னொரு புத்தகம் உண்டு: 1997-ல் தைமூர் குரான் எனும் துருக்கிய – அமெரிக்கப் பேராசிரியர் எழுதிய ‘பிரைவேட் ட்ரூத்ஸ், பப்ளிக் லைஸ்’. அதில் ‘பிரஃபரன்ஸ் ஃபால்சிஃபிகேஷன்’ எனும் பதத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். பல விஷயங்கள் குறித்த கருத்துகள், நம்பிக்கைகள் நம்மிடம் உண்டு. ஆனால், பொதுவெளியில் அவை ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்று பயந்து அவற்றை வெளிப்படுத்துவதில்லை. ஆனால், அதே கருத்தை மற்றவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்று தெரிந்தால், அந்தக் கருத்தை வெளிப்படுத்தத் துணிவு பெறுகிறோம். அதாவது, இது ஒரு ‘முன்னுரிமைகளின் அடுக்கு’க்கு வித்திடுகிறது. இதற்குப் பொருத்தமான நவீன உதாரணமாக, எல்லாப் பகுதிகளிலும் நிகழ்ந்துவரும் வலதுசாரி வெகுஜன எழுச்சியைச் சொல்லலாம்.
உண்மையில், நம்மில் பலர் நமது சிந்தனையில் மதவெறியர்களாக, பெண் வெறுப்பாளர்களாக, இனவெறியர்களாக இருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன். நாம் எப்போதும் இப்படித்தான் இருக்கிறோம். ஆனால், ஊடகங்களைத் தாராளவாத மேல்தட்டு வர்க்கத்தினர் நடத்துகிறார்கள் என்பதாலும், தாராளவாதக் கருத்துகள் வியாபித்திருப்பதாலும் நமது உணர்வுகளை நாம் வெளிப்படுத்துவதில்லை.
இப்போது சமூக வலைதளங்கள், நாம் தனியாக இல்லை என்று நமக்குக் காட்டிவிட்ட நிலையில், நம்மை நாம் வெளிப்படுத்திக்கொள்ளும் துணிச்சலைக் கூடுதலாகப் பெறுகிறோம். ட்ரம்ப் வந்தது அங்கிருந்துதான். மோடி வந்தது அங்கிருந்துதான். இப்படியான கருத்துகளைக் கொண்டவர்களின் மனதில் இருக்கும் உலகங்களுக்கு உரம் சேர்க்கும் கருத்தாக்கத்தையே ட்ரம்பும் மோடியும் வழங்குகின்றனர். “மெக்ஸிகோகாரர்கள் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள், வெளிநாட்டினர் கெட்டவர்கள், முஸ்லிம்கள் நமது பெண்களைக் கவர்ந்துசெல்கிறார்கள், பசு மூத்திரம் புற்றுநோயைக் குணப்படும்…” இப்படிப் பல. கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ‘உண்மைகள் – ஒரு பொருட்டே அல்ல!’
நமது அரசியல் சட்டத்தை எழுதியவர்களில் பெரும்பான்மையினர் மக்களுடன் தொடர்புகொண்டிராத மேல்தட்டு வர்க்கத்தினர் என்ற உண்மையின் பின்னணியில் இதை ஒப்பிட்டுப்பாருங்கள். அரசியல் சட்டத்தில் அவர்கள் உருவாக்கியிருக்கும் விழுமியங் கள் நாட்டின் பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல! உதாரணமாக, நமது அரசியல் சட்டம் தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கப் போதுமான விஷயங்களைச் செய்யவில்லை என்பதால், அதில் ஆழமான குறைபாடு உள்ளது என்றே ஒரு தாராளவாதியாக நான் கருதுகிறேன். ஆனால், தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசியல் சட்டம் அதிகப்படியாகவே செய்திருக்கிறது என்பதுதான் நமது சமூகத்தின் பொதுக் கருத்தாக இருக்கும்!
1986-ல் அமெரிக்கத் தத்துவவியலாளர் ஹாரி ஜி. ஃப்ராங்க்பர்ட் ‘ஆன் புல்ஷிட்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். 2005-ல் அந்தக் கட்டுரை ஒரு புத்தகமாக வெளியாகி நன்றாக விற்பனையானது. உளறுதல் தொடர்பான ஒரு ‘கோட்பாட்டுப் புரிதலை’ ஏற்படுத்த முயற்சிசெய்யும் புத்தகம் அது. அதில் பொய் சொல்லிகளுக்கும் உளறுவாயர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பற்றி ஃப்ராங்க்பர்ட் சொல்கிறார். அதாவது, பொய் சொல்லிகளுக்கு உண்மை தெரியும்; ஆனால் ஏமாற்றும் நோக்கம் கொண்டவராக இருப்பார்கள். உளறுவாயர்களோ உண்மையைப் பற்றிக் கவலைப்படவே மாட்டார்கள். ஃப்ராங்க்பர்ட்டின் வார்த்தைகளில் சொல்வதானால் ஒரு உளறுவாயர் ‘சரி’யின் பக்கமும் நிற்க மாட்டார்; ‘தவ’றின் பக்கமும் நிற்க மாட்டார்.
இன்றைய அரசியலில் வெளிப்படும் அசுத்தங்கள் ஜனநாயகத்தின் வக்கிரம் அல்ல; அதன் வெளிப்பாடு. இதனால் கவலைக்குள்ளாகியிருக்கும் என்னைப் போன்ற தாராளவாதிகள் உள்ளிட்ட அனைவரும் இதற்கெல்லாம் நாம்தான் பொறுப்பு என்று வருந்துவதை விட்டுவிட்டு, பணியாற்றத் தொடங்க வேண்டும்!
– அமித் வர்மா,
‘பிரகதி’ இணையதள இதழின் ஆசிரியர்.