அசாம், மிசோரம் எல்லைப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் உருவாகியிருப்பது, சில நாட்களாக நீடித்துவந்த பதற்ற நிலையைத் தணிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை 26 அன்று அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்ட எல்லையில் இரு மாநிலக் காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 காவலர்களும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட இரு மாநிலப் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த மோதலுக்கான காரணம் யார் என்று பரஸ்பரம் இரண்டு மாநில முதல்வர்களும் குற்றம்சாட்டிக்கொண்டனர். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் அடையாளம் தெரியாத 200 பேர் மீது மிசோரம் மாநிலக் காவல் துறை பதிவுசெய்த குற்றவியல் வழக்குகள், இந்த மோதலை இன்னும் தீவிரமாக்கின. இதற்குப் பதிலடியாக, மிசோரம் மாநிலக் காவல் துறை அதிகாரிகளுக்கு அசாம் மாநிலக் காவல் துறை விசாரணைக்கான அழைப்பாணையை அனுப்பிவைத்துள்ளது.
தற்போது, மிசோரம் அரசே தானாக முன்வந்து அசாம் முதல்வர் மீதான வழக்கைத் திரும்பப் பெறுவதாகவும் இது குறித்து மிசோரம் முதல்வருக்கோ தலைமைச் செயலாளருக்கோ தெரியாது என்று விளக்கம் அளித்திருக்கிறது. மாநிலத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்குத் தெரியாமல், பக்கத்து மாநில முதல்வரின் மீது காவல் துறை தன்னிச்சையாக வழக்குத் தொடர முடியுமா என்ற கேள்விகள் ஒருபக்கம் எழுந்தாலும், சமாதானத்தை நோக்கி மிசோரம் அரசு இறங்கிவந்திருப்பது தெளிவாகிறது. பேச்சுவார்த்தையைக் கணக்கில்கொண்டே, இரு மாநிலங்களுக்கு இடையேயான மோதல் வழக்கின் விசாரணை பொதுவான அமைப்பொன்றிடம் இன்னும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இரு மாநில எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து மத்திய உள் துறை அமைச்சர் தொலைபேசியில் பேசியதை அடுத்தே எல்லைப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்த்துக்கொள்ள இரு மாநில முதல்வர்களும் முன்வந்துள்ளனர் என்று தெரிகிறது. எனினும் ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகள் கடைசியில் தோல்வியிலேயே முடிந்துள்ளன. தற்போதும்கூட எல்லைப் பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லப் போவதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார். எனினும், செயற்கைக்கோள் புகைப்படங்கள், வரைபடங்களைப் பயன்படுத்தி எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மத்திய அரசு முயற்சித்துவருகிறது. அசாம்-மிசோரம் மாநிலங்கள் மட்டுமின்றி, அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைகளையும் சுமுகமான முறையில் தீர்ப்பதற்கு இந்தத் தொழில்நுட்ப வழிமுறை உதவியாக இருக்கக்கூடும். அசாமில் தற்போது பாஜகவும் மிசோரமில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியில் இருக்கின்றன. எனவே, மத்திய அரசு இவ்விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு, அப்பிராந்தியத்தில் நிரந்தர அமைதி ஏற்பட துணைநிற்க வேண்டும்.