ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது.
முதல் ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி:
ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சௌத் ஷகீல், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ராஃப், ஜாஹித் மஹ்மூத்.
ஆஸ்திரேலிய அணி:
டிராவிஸ் ஹெட், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), பென் மெக்டெர்மோட், மார்னஸ் லபுஷேன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), சீன் அபாட், நேதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்வெப்சன்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் அபாரமாக ஆடி சதமடித்தார். வார்னர் இல்லாததால் ஆட கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அதிரடியாக விளையாடி சதமடித்த டிராவிஸ் ஹெட், 72 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 101 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
3ம் வரிசையில் ஆடிய பென் மெக்டெர்மோட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். லபுஷேன் 25 ரன்களும், ஸ்டோய்னிஸ் 26 ரன்களும் அடிக்க, பின்வரிசையில் அடித்து ஆடிய கேமரூன் க்ரீன் 30 பந்தில் 40 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 313 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 314 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.
314 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இமாம் உல் ஹக்கும் பாபர் அசாமும் இணைந்து 96 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த பாபர் அசாம் 57 ரன்கள் அடித்தார். அபாரமாக விளையாடிய இமாம் உல் ஹக் சதமடித்தார். 103 ரன்கள் அடித்து இமாம் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்ற வீரர்கள் அனைவருமே மிகச்சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 45.2 ஓவைர்ல் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி.
இதையடுத்து 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான் மண்ணில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.